Paristamil Navigation Paristamil advert login

மறதி நோயை ஏற்படுத்துகிறது பிளாஸ்டிக்: எச்சரிக்கிறார் சுப்ரியா சாஹு

மறதி நோயை ஏற்படுத்துகிறது பிளாஸ்டிக்: எச்சரிக்கிறார் சுப்ரியா சாஹு

5 மாசி 2025 புதன் 03:40 | பார்வைகள் : 152


'பிளாஸ்டிக் என்ற நுண் நெகிழிகள், சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, மனித ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது' என, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பல்கலை, ஒரு ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டது. அதில், 1997ம் ஆண்டில் இருந்து, 2024 வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட, 91 பேர் உடல் கூறாய்வில், 12க்கும் மேற்பட்டோர் மூளையில், நுண்நெகிழி துகள் இருந்தது கண்டறியப்பட்டது.

சிலரது சிறுநீரகம், கல்லீரல், ரத்தம், விந்தணு, தொப்புள் கொடி, தாய்ப்பால் ஆகியவற்றிலும் நுண் நெகிழி துகள் கலந்திருப்பது தெரிய வந்தது.

பொதுவாக, 5 மி.மீ.,க்கு குறைவான, அனைத்து வகையான பிளாஸ்டிக் துகள்களும், நுண்நெகிழிகளாக கருதப்படுகின்றன. இவை கண்களுக்கு தெளிவாக தெரியாது. இவ்வகை துகள்கள், புறச்சூழல் முழுதும் ஆக்கிரமித்துள்ளன.

இந்த ஆய்வு முடிவை, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹு, சமூக வலைதளங்களில் வெளியிட்டு, இவற்றின் வாயிலாக, 'டிமென்ஷியா' என்ற மறதி நோய் பாதிப்பு ஏற்படும் என, எச்சரித்துள்ளார்.

அவரது அறிவிப்பு:


மனிதனின் மூளைக்குள்ளும், நுண் நெகிழிகள் ஊடுருவி இருக்கின்றன. சர்வதேச ஆய்வு முடிவுகளில், அவை எச்சரிக்கப்பட்டுள்ளன. மேலும், மறதி நோயை நுண் நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. உணவு, நீர், காற்று என, நமது அன்றாட வாழ்வின் அனைத்திலும், நுண் நெகிழிகள் நிறைந்துள்ளன. இவை நமது உடலுக்குள், எளிதில் சென்று விடுகின்றன.

இதன் வாயிலாக, நெகிழி என்பது, புறச்சூழலுக்கான அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், மக்களின் ஆரோக்கியத்தின் மீதான அச்சுறுத்தலாகவும் மாறி உள்ளது. எனவே, முடிந்தவரை பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு, தனிமனித விழிப்புணர்வு அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்