Paristamil Navigation Paristamil advert login

தடம் பதித்ததா அஜித் - மகிழ் கூட்டணி?

தடம் பதித்ததா அஜித் - மகிழ் கூட்டணி?

6 மாசி 2025 வியாழன் 13:56 | பார்வைகள் : 608


அஜித் மற்றும் திரிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அஜர்பைஜானில் வாழ்ந்து வருகின்றனர். 12 ஆண்டுகள் அன்போடு வாழ்ந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அஜித்தை விட்டு பிரிய நினைக்கிறார் திரிஷா. இந்த சூழ்நிலையில் அம்மா வீட்டுக்கு செல்லும் திரிஷாவை அழைத்துக் கொண்டு காரில் செல்கிறார் அஜித். அப்போது திரிஷா கடத்தப்படுகிறார். திரிஷாவை கடத்தியது யார், அவரை அஜித் மீட்டாரா என்பதே படத்தின் மீதி கதை.

விடாமுயற்சி படம், பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் ஆகும். வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் "என்ன ஆச்சு" என்ற வசனத்துடன் திரையில் அஜித் தோன்றினாலும் அடுத்த ஒரு சில காட்சிகளிலேயே இளமையாக வருகிறார். திரிஷாவிடம் அன்பை வெளிப்படுத்தும் போது காதல் ததும்ப நடித்துள்ளார். அதேநேரம் அவர் கடத்தப்பட்ட பிறகு ஒருவிதப் பதட்டத்துடன் மனைவியை தேடும் கணவனாக அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதன் பிறகு மனைவிக்காக வில்லன்களை எதிர்க்கும் காட்சிகளில் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிடுகிறார்.

குறிப்பாக அஜர்பைஜான் பாலைவன சாலையில் அஜித் கார் ஓடுவதற்கு பதிலாக பறக்கிறது. அவர் கார் ரேசர் என்பதால் இந்த காட்சிகள் ரியலிஸ்டிக்காக அமைந்துள்ளன. திரிஷாவுக்கு படத்தில் காட்சிகள் குறைவு என்றாலும் மனதில் பதியும்படியாக நடித்துள்ளார். திரையில் அழகுப் பதுமையாக தெரிகிறார்.
வில்லத்தனம் கலந்த ஜோடியாக அர்ஜுன் மற்றும் ரெஜினா மிரட்டி உள்ளனர். அதேபோல் ஆரவ்வும் போட்டி போட்டு நடித்துள்ளார். அஜித்துடன் காரில் சண்டை போடும் காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். இவர்களை தவிர ரவி ராகவேந்திரா, ஜீவா ரவி, ரம்யா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

அனிருத்தின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன, பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். அதோடு அஜித் வரும் காட்சிகளில் போட்டுள்ள பிஜிஎம் வேற லெவல். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் அஜர்பைஜான் அழகாக தெரிகிறது. பல ஆக்ஷன் காட்சிகளை ஹாலிவுட் தரத்தில் அற்புதமாக படமாக்கி உள்ளார்.

அஜித் போன்ற பெரிய ஹீரோக்கள் கிடைத்தால் ஒரு மாஸ் படத்தை ரசிகர்கள் விரும்பும் வகையில் கொடுக்க நினைக்காமல், ஒரு ஹாலிவுட் படத்தை தழுவி அதில் அஜித்தை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. தன்னுடைய வழக்கமான ஸ்டைலிலேயே இந்த படத்தையும் தந்துள்ளார். அஜித்தை வெறும் மாஸ் ஹீரோவாக மட்டும் காட்டாமல், ஆக்ஷன் கலந்த எமோஷன் ஹீரோவாக திரையில் காண்பித்துள்ளார்.

அஜித்தின் நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. முதல் பாதி மெதுவாக சென்றாலும் ரசிக்க வைத்தது. ஆனால் இரண்டாம் பாதியில் வேகமெடுத்தாலும் தேவையில்லாத காட்சிகளால் சோர்வு ஏற்படுகிறது. முதல் பாதி முழுவதும் அஜித் எப்போது வில்லன்களை அடிப்பார் என ஏங்க வைக்கிறார். பெரிய அளவில் அஜித் - அர்ஜுன் இடையே சண்டைக் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம். அஜித் படம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் மிகுந்த எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு வந்த ரசிகர்களுக்கு இந்த விடாமுயற்சி படம் சற்று ஏமாற்றத்தையே தந்துள்ளது.
 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்