ஐரோப்பாவின் மிக அதிகளவான பயணிகள் குவியும் சுற்றுலாத்தலம் எது தெரியுமா?
24 மார்கழி 2017 ஞாயிறு 13:30 | பார்வைகள் : 17960
இன்றைய பிரெஞ்சு புதினம் உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஐரோப்பாவின் முக்கிய அடையாளம் பிரான்ஸ்... கல்வி வளர்ச்சியும் நாகரீகத்திலும் உச்சத்தில் இருக்கும் நம் பிரான்சின் மிக பெரிய பெருமை ஈஃபிள் கோபுரம்!! உலகில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் குவியும் நாடாகவும் பிரான்ஸ் இருக்கின்றது. அப்படியென்றால் ஐரோப்பாவின் அதிகளவான பயணிகள் குவியும் சுற்றுலாத்தலம் ஈஃபிள் கோபுரமாகத்தானே இருக்கவேண்டும்?
இல்லை!!
ஐரோப்பாவின் மிக அதிகம் பேர் சென்ற சுற்றுலாத்தலமாக டிஸ்னிலேண்ட் பரிஸ் உள்ளது. நம்ப முடியவில்லையா? உண்மைதான். ஈஃபிள் கோபுரம் 'உலகில் அதிகம் பேர் பார்வையிட்ட' பட்டியலில் உள்ளது.
பரிசின் கிழக்கு பகுதியில், மிக பிரம்மாண்டமாய் அமைக்கப்பட்டுள்ள டிஸ்னிலேண்ட் சுட்டிகளின் மிக பிடித்தமான இடமாகும். விடுமுறைகளின் போதெல்லாம் 'டிஸ்னி.. டிஸ்னி' என குழந்தைகள் ஆர்ப்பரிப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள்.
டிஸ்னிலேண்ட் பரிஸ் குறித்து முன்னதாக பிரெஞ்சு புதினத்தில் குறிப்பிட்டிருந்தாலும் சில 'குயிக்' தகவல்கள் உங்களுக்காக..!!
டிஸ்னிலேண்டின் மொத்த பரப்பளவு 4,800 கெக்டேயர் பரப்பளவு. அதாவது 19 கிலோமீட்டர்கள் சதுர பரப்பளவு.
உள்ளேயே உணவங்கள், பார்ட்டி கூடம், சொப்பிங் வளாகங்கள், உள்ளிட்ட பல வசதிகளும் ஒரு 'கோல்ஃப்' மைதானமும் உள்ளது.
ஏப்ரல் 12, 1992 ஆம் ஆண்டு இந்த டிஸ்னிலேண்ட் திறக்கப்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் 13.4 மில்லியன் பேர்கள் இங்கே குவிந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு அதிகம் பிடித்தமான இடமாக இருப்பதால், நிச்சயம் பெற்றோருடனோ உறவினரோடோ வரவேண்டியாக இருக்கும்.. பின்னர் இது முழு குடும்பத்துக்குமான 'சுற்றுலா'வாக அமைந்து விடுகிறது. இதுவே இவர்களின் அதிகப்படியான அதிர்ஷ்ட்டம்!! நீங்களும் இந்த கிருஸ்துமஸ் விடுமுறைக்கு ஒரு 'விஸிட்' அடிக்கலாமே??!!