Paristamil Navigation Paristamil advert login

தொகுதி சீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பு: உதயநிதி

தொகுதி சீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பு:  உதயநிதி

7 மாசி 2025 வெள்ளி 02:57 | பார்வைகள் : 439


மத்திய அரசின், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம், கூட்டாட்சி தத்துவத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய தாக்குதல்,” என, தமிழக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

கேரளாவின், 'மாத்ருபூமி' மலையாள நாளிதழ், திருவனந்தபுரத்தில் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி பேசியதாவது:

'ஒரே நாடு; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால், ஒரு மாநிலத்தில் கூட்டணி மாற்றம் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் வாயிலாக அரசு கலைக்கப்படும் போது, தேசிய அளவில் அடுத்து தேர்தல் நடத்தப்படும் வரை, அந்த குறிப்பிட்ட மாநிலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இது, கூட்டாட்சி தத்துவத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய தாக்குதல். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174ஐ மீறுவதுடன், கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கிறது.

அதேபோல, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை வரையறுக்கும் மத்திய அரசின் முடிவு, தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தொகுதி வரையறை செய்யப்பட்டால், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு பார்லி.,யில் தற்போதுள்ள பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்.

தென் மாநிலங்களின் குரலை பார்லி.,யில் ஒடுக்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நினைக்கிறேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்பை குறைக்கும் வகையில் கவர்னர் அலுவலகம் செயல்படக்கூடாது.

துணைவேந்தர் தேர்வு உட்பட கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை பல்கலை மானியக்குழு தெரிவித்துள்ளது. சமூக வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் கல்வித்துறையை மாநில அரசுகளின் கைகளில் இருந்து பிடுங்கி, மத்திய அரசின் கைகளில் அளிக்க முயற்சி நடக்கிறது.

மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட்டில் கூட தமிழகமும், கேரளாவும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.
 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்