பேய்கள் குடியிருக்கும் தொடரூந்து நிலையங்கள்! - ஒரு மர்ம வரலாறு..!!
16 மார்கழி 2017 சனி 10:30 | பார்வைகள் : 18311
பரிசில் எண்ணற்ற தொடரூந்து நிலையங்கள் உள்ளமை நீங்கள் அறிந்ததே.. ஆனால், நீங்கள் அறியாத, சென்றிடாத பல பேய்கள் குடியிருக்கும் தொடரூந்து நிலையங்களும் பரிசில் உள்ளன. அதுகுறித்து அறிந்துகொள்வோம் வாங்க..!!
பாழடைந்த.. பயன்பாட்டில் இல்லாத மெற்றோ நிலையங்கள் அவை. ஹொலிவுட் திரைப்படங்களில் வரும் ஆளில்லா பங்களாக்கள் போல், சிலந்தி வலைகள் பின்னப்பட்டிருக்கும் மிக திரில்லான ஆளில்லா தொடரூந்து நிலையங்கள் இவை.
பரிசுக்குள் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்ட தொடரூந்து நிலையங்கள் இதுபோன்று பாழடைந்து பராமரிப்பற்று திகிலூட்டும் வகையில் உள்ளன. குறித்த இந்த நிலையங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமும் கூட!!
ஆனால், இளைஞர்கள் பலர் இங்கு ஒரு திகில் அனுபவத்துக்காக இரவு நேரங்களில் கேமராவும் கையுமா நுழைவதும், 'இப்பொழுது நாங்கள் பேய்கள் குடியிருக்கும் மிக ஆபத்தான மெற்றோ நிலையத்துக்குள் நுழைந்துள்ளோம்!' என வர்ணனை கொடுப்பதும் என பல சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளுவதும், இளைஞர்கள் தொடர்ச்சியாக இதுபோல் சம்பவங்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகிவிட்டது.
Haxo, P. des Lilas Cinéma, Martin Nadaud, Arsenal போன்ற தொடரூந்து நிலையங்கள் அவற்றில் சில.. சரி உண்மையில் இங்கு பேய்கள் உண்டா?
இல்லை!!
இந்த தொடரூந்து நிலையங்கள் கேட்பாரற்றுக் கிடக்க காரணம், இரண்டாம் உலகப்போரில் பிரான்ஸ் ஈடுபட்டிருக்கும் போது, பல இளைஞர்கள், ஊழியர்கள் ஆயுதம் ஏந்தி போராட அழைக்கப்பட்டனர். அப்போது தொடரூந்து போக்குவரத்துக்கள் தேவைப்படாததால் பல தொடரூந்து நிலையங்கள் மூடப்பட்டன. அதன் பின்னர் யுத்தம் முடிவுக்கு வந்து இயல்பு வாழ்க்கை ஆரம்பிக்க... மூடப்பட்ட தொடரூந்து நிலையங்கள் தூசி தட்டப்பட்டன.
அவற்றில் 'மிஸ்' ஆன மெற்றோ நிலையங்களே இன்று இந்த Stations Fantômes என அழைக்கப்படும் பேய் மெற்றோ நிலையங்களாகும்.
உண்மையில், இந்த தொடரூந்து நிலையங்களுக்காக தேவைகள் ஏற்படவில்லை என்பதே உண்மை. சரி.. பரிசுக்குள் இருக்கும் இட நெருக்கடிக்குள் ஏன் இத்தகைய இடங்களை சும்மா விட்டு வைக்கவேண்டும்??!! பதில் தெரியாத கேள்வி அது.