Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவை எதிர்மறையாக சித்தரிப்பதா: வங்கதேசத்திற்கு கண்டனம்

இந்தியாவை எதிர்மறையாக சித்தரிப்பதா: வங்கதேசத்திற்கு கண்டனம்

8 மாசி 2025 சனி 02:55 | பார்வைகள் : 388


உள்நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு இந்தியாவை குறை சொல்லி எதிர்மறை பிம்பத்தை உருவாக்குவது வருத்தத்திற்குரியது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டம் காரணமாக, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். அவர் நம் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு ஆன்லைன் வாயிலாக தொண்டர்களுடன் ஷேக் ஹசீனா பேசினார். அப்போது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் பரவியதும் மாணவர் அமைப்பினர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், வங்கதேச நிறுவனரும், ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீடு போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டு தரைமட்டமானது. இதனால், அந்நாட்டில் பதற்றம் நிலவுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில், நான் நாட்டுக்காக எதையும் செய்யவில்லையா? பிறகு எதற்காக என்னை இப்படி அவமதிக்க வேண்டும். என் தந்தையின் நினைவாக இருந்த ஒரே வீட்டையும் அழித்து விட்டனர். இதற்கு பின்னால் யார் இருக்கின்றனர். ஏன் இந்த தொடர் தாக்குதல்? அடையாளங்களையும் கட்டமைப்புகளையும் அழிக்கலாம். ஆனால், வரலாற்றை அழிக்க முடியாது. நிச்சயம் இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனக்கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டாக்காவில் செயல்படும் இந்திய தூதரகத்தில் உள்ள அதிகாரியிடம் வங்கதேச வெளியுறவு அமைச்சகம் அளித்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் தங்கியிருப்பதாக கூறப்படும் ஷேக் ஹசீனாவின் தவறான மற்றும் புனையப்பட்ட கருத்துகளாலேயே வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் தலைதூக்கி உள்ளன. அவரது பேச்சு மற்றும் அறிக்கைகள் எங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளை காயப்படுத்துகின்றன. இது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆரோக்கியமான உறவுகளுக்கு உகந்தவை அல்ல. எனவே, அங்கிருந்தபடி, இதுபோன்ற பேச்சுகளை ஷேக் ஹசீனா வெளியிடுவதை தடுக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்