பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி ரத்தாகும்
![பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி ரத்தாகும்](ptmin/uploads/news/India_rathna_anbil-magesh.jpg)
8 மாசி 2025 சனி 02:56 | பார்வைகள் : 406
பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதுடன், அவர்களின் கல்வித் தகுதியையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார். ஆசிரியர்கள் சிலரின் அத்துமீறல் சம்பவங்களால், அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
சென்னை குரோம்பேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வைரவிழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் அன்பரசன், மகேஷ் ஆகியோர் விழா மலரை வெளியிட்டனர். பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி பங்கேற்றனர்.
அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
தமிழகத்தில் 38,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இருந்தாலும், இந்தாண்டு 2,211 அரசு பள்ளிகள், நுாற்றாண்டை நிறைவு செய்ய உள்ளன. அரசு பள்ளிகளின் முக்கியத்துவத்தை, பல்வேறு விதத்தில் உணர்த்திக் கொண்டிருக்கிறோம்.
பாராட்டு
மாணவர்கள் உயர்ந்த இடத்திற்கு வரும்போது, நமக்கு எடுத்துக்காட்டாக அமர்ந்துள்ள பெரியவர்கள் போன்று, அதே அடக்கத்தோடும், அறிவோடும் திகழ வேண்டும். வாழ்க்கையில் பற்றோடு, பாசத்தோடு, தெளிவோடு, தன்னம்பிக்கையோடு இருக்க பள்ளி கல்வி அவசியம்.
பள்ளி கல்வியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்று மத்திய அரசு பாராட்டியுள்ளது. இந்த பாராட்டு மட்டும் போதுமா... அதற்கான நிதியை வழங்க வேண்டும் அல்லவா! நிதியை வழங்குமாறு, மாணவச் செல்வங்கள் வாயிலாக மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவியை அதே பள்ளியின் ஆசிரியர்கள் மூவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் உண்மைத்தன்மை விசாரிக்கப்பட்டு, உண்மை இருக்கும் பட்சத்தில் கடும் தண்டனை வழங்கப்படும்.
அதே நேரத்தில், 'டிஸ்மிஸ்' செய்வது, கடுமையான தண்டனை வழங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், அவர்களின் கல்வித் தகுதியை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
அரசு பள்ளிகளில் மனநலம், உடல்நலம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும் வகையில், 800க்கும் மேற்பட்ட டாக்டர்கள் சுற்றுப்பயணத்தில் உள்ளனர். அப்போது, மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து அறிய வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும், மகிழ்மன்றம் என்ற திட்டத்தின் வாயிலாக, பல்வேறு 'கிளப்'களை உருவாக்கி, ஆசிரியர் - மாணவர் நல்லுறவை வளர்க்கும் வகையிலும், மாணவர்களின் திறமையை வளர்க்கும் வகையிலும் செயல்படுத்தி வருகிறோம்.
நடவடிக்கை
அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆசிரியர்கள் தவறிழைக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. முக்கியமாக, பாலியல் சீண்டலில் ஆசிரியர்களே ஈடுபடும் சம்பவங்கள் நடக்கின்றன.
அவ்வாறு ஈடுபடுவோர் குறித்து புகார் வந்ததும், இடைநீக்கம் செய்து விசாரிக்கிறோம்.
விசாரணையில் உண்மை என்பது உறுதியானால், அவரை பணிநீக்கம் செய்வதுடன், வேறு இடத்தில் பணியில் சேருவதை தடுக்கும் வகையில், அவரின் கல்விச் சான்றிதழ்களை தகுதி நீக்கம் செய்து, கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம்.
இனி, மாணவியருக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்காத வகையில், தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
![](/images/engadapodiyalxy.jpg)