27 ஆண்டுகளுக்கு பின் தலைநகரில் பா.ஜ., ஆட்சி
![27 ஆண்டுகளுக்கு பின் தலைநகரில் பா.ஜ., ஆட்சி](ptmin/uploads/news/India_rathna_bjp-victory.jpg)
9 மாசி 2025 ஞாயிறு 03:28 | பார்வைகள் : 399
மத்தியிலும், பல மாநில தேர்தல்களிலும் வெற்றி பெற்றாலும், தேசிய தலைநகர் டில்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வந்த பா.ஜ., 27 ஆண்டுகளுக்கு பின், அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக பெரும் முட்டுக்கட்டையாக இருந்த ஆம் ஆத்மி என்ற தடையை பிரதமர் நரேந்திர மோடி அகற்றி உள்ளார்.
கடந்த 1993ல் டில்லிக்கு சட்டசபை அந்தஸ்து வழங்கப்பட்ட பின் நடந்த தேர்தலில், பா.ஜ., வென்றது. அந்த ஐந்தாண்டு கால ஆட்சியில், மதன் லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா சுவராஜ் என்று மூன்று பேர் மாறி மாறி முதல்வர்களாக இருந்தனர்.
அதன்பின், 1998 - 2013 வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் வென்று, ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தார். இதைத் தொடர்ந்து, 2013ல் நடந்த தேர்தலில், ஆம் ஆத்மி வென்றது.
முடிவு
முதல்வராக பதவியேற்ற, அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆட்சி, 48 நாட்களில் முடிவுக்கு வந்தது. ஆம் ஆத்மிக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் திரும்ப பெற்றதால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெஜ்ரிவாலின் ஆட்சி குறுகிய காலத்தில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு ஜனாதிபதியின் ஆட்சி அமலில் இருந்தது. கடந்த 2015ல் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளில் 67ல் வென்றது. 2020 தேர்தலில் ஆம் ஆத்மி, 62ல் வென்றது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறை சென்று திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால் கடந்தாண்டு செப்டம்பரில் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து ஆதிஷி முதல்வரானார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் நோக்கில், கடந்த, 5ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டது.
தேசிய அளவிலான, 'இண்டி' கூட்டணியில், ஆம் ஆத்மியுடன் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைத்தாலும், தேசிய தலைநகரில் வெற்றி பெற முடியாதது, அக்கட்சிக்கு பெரிய நெருடலாகவே இருந்தது.
கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களில், டில்லியின் ஏழு தொகுதிகளையும் கைப்பற்றினாலும், சட்டசபையை கைப்பற்ற முடியாதது, கட்சித் தலைமைக்கு கவுரவ பிரச்னையாகவே இருந்தது. சர்வதேச ஊடகங்களும் இதை விமர்சித்து செய்தி வெளியிட்டன.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்த முறை தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ., தலைவர் நட்டா, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் என, பெரும் படை களமிறக்கப்பட்டது. இதைத் தவிர, ஹரியானா, மஹாராஷ்டிராவில் உதவியதுபோல், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் களப்பணியில் இறங்கியது.
இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., புதிய வியூகம் வகுத்தது.
மதுபான ஊழல் மோசடி மற்றும் தான் தங்குவதற்கு சொகுசான கண்ணாடி மாளிகை கட்டியது ஆகியவற்றால், கெஜ்ரிவாலுக்கு எதிரான மனநிலை மக்களிடையே உருவானது. இதை சாதகமாக்கி, அவற்றை வைத்து பா.ஜ., பிரசாரம் செய்தது.
மேலும், மத்திய பட்ஜெட்டில், 12 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு வரி கிடையாது என்ற அறிவிப்பு, நடுத்தர வருவாய் பிரிவினர் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
முன்னிலை
டில்லி வாக்காளர்களில் 60 சதவீதம் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள். மேலும் மத்திய அரசுப் பணிகளில் அதிகம் உள்ளோர். புதிய சம்பள கமிஷன் அறிவிப்பும், இவர்களை ஈர்த்தது.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. துவக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ., முன்னிலையில் இருந்தது.இறுதியில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பா.ஜ., 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு, 36 தொகுதிகள் தேவை என்ற நிலையில், அதை விட அதிகமான தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்று சாதித்துள்ளதுஆம் ஆத்மி 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில், பா.ஜ.,வின் பர்வேஷ் வர்மாவிடம், 4,089 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்தார். டில்லியில் பா.ஜ., வெற்றி பெற்றதை அடுத்து, அந்த கட்சியின் தொண்டர்கள் நாடு முழுதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தவறவிட மாட்டோம்!
பா.ஜ.,வுக்கு இந்த வரலாற்று வெற்றியை அளித்த அனைவருக்கும் அடிமனதில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன். டில்லியில் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட மாட்டோம். வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவதில் டில்லி முக்கிய பங்கு வகிப்பதை உறுதி செய்வோம்.- நரேந்திர மோடி,பிரதமர்
மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்!
மக்களின் தீர்ப்பே முதன்மையானது; அதை நாங்கள் ஏற்கிறோம். வெற்றி பெற்ற பா.ஜ.,வுக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் நிறைவேற்றுவர் என்று நம்புகிறேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சிறந்த எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம்.- அரவிந்த் கெஜ்ரிவால், ஒருங்கிணைப்பாளர், ஆம் ஆத்மி
முதல்வர் யார்?
டில்லியில், 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ள நிலையில், முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.வழக்கமாக எந்த மாநிலமாக இருந்தாலும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலேயே சட்டசபை தேர்தலை பா.ஜ., சந்திக்கும். தேர்தலுக்குப் பின், பல முக்கிய தலைவர்களுக்கு, முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்படும். ஆனால், யாரும் எதிர்பார்க்காத ஒருவரை கட்சித் தலைமை முதல்வராக அறிவிக்கும். இதில் ஜாதி, பிராந்தியம் உட்பட பல காரணங்கள் இருக்கும். மேலும், அடுத்தத் தலைமுறை உருவாக்குவதும் முக்கியமான நோக்கமாக இருக்கும்.இந்த வகையில், டில்லியில் யார் முதல்வர் என்பது தொடர்பாக பலருடைய பெயர்கள் உலா வருகின்றன.அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா இதில் முன்னிலையில் உள்ளார். மற்றொரு முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா சுவராஜின் மகள் பான்சுரி சுவராஜ் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது. கட்சியின் தேசிய செயலரும், முன்னாள் ராஜ்யசபா எம்.பி.,யுமான துஷ்யந்த் கவுதம், வடகிழக்கு டில்லி எம்.பி.,யான மனோஜ் திவாரி, கட்சியின் டில்லி முன்னாள் தலைவர் சதீஷ் உபாத்யாய், தற்போதைய தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோரும் போட்டியில் உள்ளனர்.
![](/images/engadapodiyalxy.jpg)