படித்தவர்களையும் ஏமாற்றும் தி.மு.க.,: முன்னாள் அமைச்சர் ராஜு
![படித்தவர்களையும் ஏமாற்றும் தி.மு.க.,: முன்னாள் அமைச்சர் ராஜு](ptmin/uploads/news/India_rathna_kadambur-raju.jpg)
9 மாசி 2025 ஞாயிறு 03:30 | பார்வைகள் : 1041
படிக்காத பாமரர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல; படித்து பட்டம் பெற்ற விரிவுரையாளர்களையும் இந்த அரசு ஏமாற்றுகிறது,” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று அளித்த பேட்டி:
கடந்த 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் உறுப்புக் கல்லுாரிகளாக செயல்பட்டு வந்த 41 கல்லுாரிகள், ஒரே அரசாணையில் அரசு கலைக் கல்லுாரிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
உறுப்புக் கல்லுாரிகளாக செயல்பட்ட கல்லுாரிகளில், 7,300 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரமாக்கப்படுவர் என கூறப்பட்டது. 536 வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., எதையும் நிறைவேற்றவில்லை.
கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசு தரப்பு அவர்களை மிரட்டுகிறது. பல மாநிலங்களில் 50,000 ரூபாய்க்கும் மேல் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் 25,000 ரூபாய் தான் சம்பளமாக வழங்கப்படுகிறது.படிக்காத பாமரர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, படித்து பட்டம் பெற்ற விரிவுரையாளர்களையும் இந்த அரசு ஏமாற்றுகிறது. கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை, தாமதிக்காமல் அரசு நிறைவேற்ற வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இதுகுறித்து பேசுவார். 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்வி அடையும்; அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
![](/images/engadapodiyalxy.jpg)