கெஜ்ரிவாலின் ஆணவமே தோல்விக்கு காரணம் : ஆம் ஆத்மி எம்.பி.,
![கெஜ்ரிவாலின் ஆணவமே தோல்விக்கு காரணம் : ஆம் ஆத்மி எம்.பி.,](ptmin/uploads/news/India_rathna_aam-athmi-swathi-malival.jpg)
10 மாசி 2025 திங்கள் 03:16 | பார்வைகள் : 369
டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்ததற்கு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆணவமே காரணம்,” என, அக்கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சுவாதி மாலிவால் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில், 22 இடங்களை மட்டுமே பெற்று ஆம் ஆத்மி ஆட்சியை பறிகொடுத்தது. பா.ஜ., 48 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது.
ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சவுரப் பரத்வாஜ், சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் படுதோல்வி அடைந்தனர்.
ஆம் ஆத்மியில் கரை சேர்ந்த ஒரு சில மூத்த தலைவர்களில், வெளியேறும் முதல்வரான ஆதிஷியும் ஒருவர். இவர், கல்காஜி சட்டசபை தொகுதியில் பா.ஜ.,வின் ரமேஷ் பிதுாரியை எதிர்த்து போட்டியிட்டு, 3,521 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சொந்த கட்சி ஆட்சியை பறிகொடுத்த நிலையிலும், தன் வெற்றியை கொண்டாடும் விதமாக, ஆதிஷி உற்சாக நடனம் ஆடிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானது. இது குறித்து, ஆம் ஆத்மியின் ராஜ்யசபா உறுப்பினர் சுவாதி மாலிவால் கூறியதாவது:
ஆதிஷி செய்தது வெட்கக்கேடானது. சொந்த கட்சியும், அதன் மூத்த தலைவர்களும் தோல்வி அடைந்துள்ள நிலையில், ஆதிஷி தன் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஒருவர் மிகுந்த ஆணவத்துடன், மக்கள் பணி செய்வதை எப்போது நிறுத்துகிறாரோ, அப்போது மக்கள் அவருக்கு தகுந்த பாடத்தை கற்றுத்தருவர்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அது தான் நடந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை. கெஜ்ரிவாலின் ஆணவமே தோல்விக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
கெஜ்ரிவாலின், 'பரிவர்தன்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய சுவாதி மாலிவால், பின், ஆம் ஆத்மியில் இணைந்தார். டில்லி பெண்கள் கமிஷன் தலைவராக பதவி வகித்தார். கடந்த ஆண்டு ஜனவரியில், டில்லியில் இருந்து ஆம் ஆத்மியின் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கெஜ்ரிவாலை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றபோது, அவரது உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக புகார் அளித்தார். இந்த வழக்கில் பிபவ் குமார் சிறை சென்றார். சுவாதி, கட்சிக்குள் நடக்கும் தவறுகளை பயமின்றி வெளிப்படையாக சுட்டிக் காட்டியும் வருகிறார். இதற்கிடையே, தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்ததை அடுத்து, ஆதிஷி முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
தோண்டும் பா.ஜ.,
டில்லியில் பா.ஜ., அரசு ஆட்சி அமைத்தவுடன் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டத்தில், சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஆம் ஆத்மி அரசு செய்த ஊழல்களை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட உள்ளதாக டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா நேற்று தெரிவித்தார்.
ராஜினாமா
தேர்தல் தோல்வியை அடுத்து ஆம் ஆத்மியைச் சேர்ந்த ஆதிஷி, முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதையடுத்து, தேசிய தலைநகரின் 7வது சட்டசபையை கலைத்து கவர்னர் உத்தரவு பிறப்பித்தார்.
![](/images/engadapodiyalxy.jpg)