Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கும்பமேளா கூட்டத்தால் 300 கி.மீ., துாரம்! போக்குவரத்து நெரிசல்

கும்பமேளா கூட்டத்தால் 300 கி.மீ., துாரம்! போக்குவரத்து நெரிசல்

11 மாசி 2025 செவ்வாய் 02:03 | பார்வைகள் : 9521


பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில், 44 கோடி பேர் புனித நீராடியுள்ள நிலையில், மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், 300 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.

இங்குள்ள பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி, கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது; வரும் 26ம் தேதி வரை நடக்க உள்ளது. இதுவரை, 44 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

மஹா கும்பமேளாவின் முக்கிய நாட்களில் ஒன்றான வசந்த பஞ்சமியை தொடர்ந்து, கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது.

வார விடுமுறை நாட்களில் புனித நீராடுவதற்காக, பிரயாக்ராஜ் நோக்கி மக்கள் வாகனங்களில் படையெடுத்தனர்.

இதனால், பிரயாக்ராஜ் நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தின் ரேவாவின் சாக்கட்டில் துவங்கி, பிரயாக்ராஜ் வரையிலான 300 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த 8ம் தேதி துவங்கி,நேற்று காலை வரை என, 48 மணி நேரம் மக்கள் நெடுஞ்சாலையிலேயே சிக்கித் தவித்தனர்.

இதைத் தவிர, உத்தர பிரதேசத்தின் வாரணாசி, லக்னோ, கான்பூர் என பல நகரங்களில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த மார்க்கங்களில், 25 - 50 கி.மீ., துாரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பிரயாக்ராஜிலும் 7 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை ஒழுங்குபடுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

ஜபல்பூரில் இருந்து 15 கி.மீ., முன் இருக்கிறேன். பிரயாக்ராஜ் 400 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது' என, சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதுபோல பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது தொடர்பான படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டுள்ளனர். குளிக்க முடியாமல், சாப்பிட முடியாமல் சாலையிலேயே காத்திருப்பதாக பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

ரயில்கள் வாயிலாகவும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். கும்பமேளாவை ஒட்டி, அதன் அருகில் ஒன்பது ரயில் நிலையங்கள் வாயிலாக பக்தர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரயாக்ராஜ் சங்கமம் ரயில் நிலையத்துக்கு வெளியே மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதையடுத்து, இந்த ரயில் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த 9ம் தேதி துவங்கி, 14ம் தேதி இரவு வரை, இந்த ரயில் நிலையம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என, முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

சாலைகளில் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான எந்த ஒரு வசதியையும் அரசு செய்யவில்லை. முதல்வரோ, துணை முதல்வர்களோ, அமைச்சர்களோ, இதைப் பற்றி கவலையும் படவில்லை.

சாலைகளில் நிற்கும் மக்களின் மொபைல் போன் பேட்டரிகள் தீர்ந்து விட்டன. இதனால், குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கும்பமேளா காலத்திலாவது, சுங்க வரி கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

புனித நீராடினார் ஜனாதிபதி!

மஹா கும்பமேளாவை ஒட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, திரிவேணி சங்கமத்தில் நேற்று புனித நீராடினார். முன்னதாக அவரை கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். படகில் சென்று, திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி புனித நீராடினார். அப்போது, கங்கை நதிக்கு தேங்காயை காணிக்கையாகச் செலுத்தி, சூரியக் கடவுளை வேண்டிக் கொண்டார்.இந்த பயணம் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது:அதிகளவு மக்கள் கூடுவது, நம் நாட்டின் அளப்பரிய கலாசார பாரம்பரியத்தின் பெருமையை காட்டுவதாக உள்ளது. ஒற்றுமை மற்றும் ஆன்மிகத்துடன் இணைந்த மனிதநேயம் ஆகிய செய்திகளை இது உலகுக்கு காட்டுவதாக உள்ளது. அனைவருக்கும் அமைதியும், வளமும் அளிக்கும்படி, தாய் கங்கையை வேண்டிக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ரயில் இன்ஜினில் ஏறிய பயணியர்பிரயாக்ராஜ் செல்வதற்காக கடந்த 8ம் தேதி அதிகாலை, வாரணாசி ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரயில் நின்று கொண்டிருந்தது. அதில் இடம் பிடிப்பதற்காக நுாற்றுக்கணக்கான பயணியர் அடித்துப் பிடித்து ஓடினர். ஒரு சில நிமிடங்களிலேயே ரயிலின் அனைத்து பெட்டிகளும் நிரம்பி வழிந்தன. இடம் கிடைக்காத ஏராளமானோர் அங்கும், இங்கும் ஓடினர். சில பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர், ரயில் இன்ஜினில் ஏறினர். இன்ஜின் டிரைவர், இவர்களை தடுக்க முடியாமல் திகைத்தார். கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டதால், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும், அவர்களை வெளியேற்ற முடியாமல் சிரமப்பட்டனர். ஒரு வழியாக கதவை திறந்த போலீசார், இன்ஜினில் ரயில் டிரைவர் பகுதியை ஆக்கிரமித்திருந்த அனைவரையும் வெளியேற்றினர். இதன்பின், அந்த ரயில் பிரயாக்ராஜ் புறப்பட்டு சென்றது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்