Paristamil Navigation Paristamil advert login

டாஸ்மாக் விவகாரம் சட்டசபையில் பெரிதாக வெடிக்கும்!

டாஸ்மாக் விவகாரம் சட்டசபையில் பெரிதாக வெடிக்கும்!

17 பங்குனி 2025 திங்கள் 03:39 | பார்வைகள் : 285


தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று துவங்குகிறது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பிரதான எதிர்க்கட்சி முன்னறிவிப்பு கொடுத்துள்ளதாலும், டாஸ்மாக் விவகாரத்தை முன்னிறுத்தி அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருப்பதாலும், இந்த கூட்டத்தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

சட்டசபை, 14ம் தேதி கூடியது; அன்று, 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள், வேளாண் பட்ஜெட் தாக்கலானது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் வருவதால், மக்களை கவரும் வகையில் பல அறிவிப்புகள், திட்டங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி எதுவும் வரவில்லை.

அரசின் நிதி நிலைமை சரியில்லை என்பதற்கு, இதையும் சான்றாக கருதலாம். இந்த ஆண்டும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க அரசு முடிவு செய்திருப்பது, நிதி நிலைமைக்கு இன்னொரு சான்றாக பார்க்கலாம்.

'மாநில உற்பத்தியும், பொருளாதாரமும் வளர்ந்து வருவதால், கடன் அதிகரிப்பு குறித்து கவலை அடைய தேவையில்லை' என்று நிதி அமைச்சர் சொல்கிறார்.

நிதி திரட்ட சிரமம்


மொத்த பட்ஜெட்டில் எத்தனை சதவீதம் என்று பார்க்கும் போது, கடன் அளவு கட்டுக்குள் இருப்பதாக தோன்றினாலும், அமலில் உள்ள திட்டங்களுக்கே நிதி திரட்ட அரசு சிரமப்படுகிறது.

கல்வி, போக்குவரத்து, சாலைகள் என ஒவ்வொரு துறையும், மத்திய அரசின் நிதியை எதிர்பார்த்து ஒவ்வொரு அடியாக நகர வேண்டியிருக்கிறது. இந்த பின்னணியில் அரசின் மொத்த கடன், 10 லட்சம் கோடி ரூபாயை நெருங்குவது கவலைப்பட வேண்டிய விஷயம் தான்.

நான்கு ஆண்டுகளுக்கு முன், தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க., அறிவித்த பல திட்டங்கள் குறித்து பேச்சே இல்லை.

வாக்குறுதிகளை நம்பி தி.மு.க.,வை கோட்டைக்கு அனுப்பி வைத்ததில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு கணிசமானது. தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதில், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்; போராட்டமும் அறிவித்துள்ளனர்.

டில்லி, புதுச்சேரி போல உரிமைத்தொகை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று ஆவலுடன் காத்திருந்த பெண் வாக்காளர்கள் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. இந்த உணர்வுகள் எதிர்க்கட்சிகளால் சபையில் பிரதிபலிக்கும்.

டாஸ்மாக் சர்ச்சைகள் தமிழகத்துக்கு புதிதல்ல. மது விற்பனையில் நடக்கும் முறைகேடுகள் மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தெரிந்த ரகசியம். எனினும், மத்திய அரசின் அமலாக்கத்துறை இதில் ஆய்வுகள் நடத்தி, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது.

வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல் கிடைத்த கதையாக, எதிர்க்கட்சிகளுக்கு இந்த அறிக்கை உதவும். இதுவரை அமைதி காத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு களை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று சொல்லி இருப்பது, அரசு இந்த பிரச்னையை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டம்.

சட்டம் - ஒழுங்கு பிரச்னையில், அரசு நிச்சயமாக பல கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். பெரிதும் பேசப்பட்ட கொலை சம்பவங்கள் கூட கோர்ட் தீர்ப்பை எட்டாத நிலையில், பட்டப்பகல் கொலைகள் அதிகரித்து வருவது மக்களிடம் விவாதப்பொருளாகி இருக்கிறது.

திசை திருப்ப முடியும்


இதையும் எதிர்க்கட்சிகள் விட்டுவைக்கப் போவதில்லை. எனினும், பிரச்னைகளை எப்படி சுலபமாக திசை திருப்ப முடியும் என்பதை, நாடெங்கும் ஆளுங்கட்சிகள் இப்போது கற்று தேர்ந்துள்ளன.

மற்றவர்களுக்கு இதில் பாடம் நடத்தும் தகுதி தமிழக ஆளுங்கட்சிக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. இந்த தொடரில் அது முழுவீச்சில் வெளிப்படும்.

சபாநாயகர் அப்பாவு மீது, அ.தி.மு.க., நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தி.மு.க.,வுக்கு பெரும்பான்மை இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு கிடையாது.

சபாநாயகரின் பாரபட்சமான அல்லது நியாயமற்ற நடவடிக்கைகளை மக்களின் கவனத்துக்கு கொண்டுவர முடியும் என்பது மட்டுமே, எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய ஆறுதல் பரிசு. அதுவும், சபைக்குறிப்பு என்ற நிபந்தனைக்கு உட்பட்டது.

தீர்மானங்கள்


அப்பாவு மீதான தீர்மானம் இன்றே விவாதத்துக்கு அனுமதிக்கப்பட்டு, உடனடியாக ஓட்டெடுப்பும் நடந்து தோற்கடிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.

பட்ஜெட் மீதான விவாதம் முடிந்து, 24ம் தேதி முதல், துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.

தொகுதி மறுவரையறை உட்பட சில பிரச்னைகளில், மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே, ஒன்றரை மாதங்களுக்கு சட்டசபையில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்