Gare de Châtelet - Les Halles உலகின் மிகப்பெரிய நிலக்கீழ் சுரங்கம் கொண்ட நிலையம்!!
21 சித்திரை 2017 வெள்ளி 17:30 | பார்வைகள் : 17974
தலைப்பை வாசித்ததும்... அப்படியா.. என ஆச்சரியமாக இருக்கல்லவா..? உண்மைதான். பரிசில் உள்ள Châtelet தொடரூந்து நிலையம் தான் உலகின் மிகப்பெரிய நிலக்கீழ் சுரங்கம் கொண்ட தொடரூந்து நிலையம் ஆகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, Gare de Châtelet நிலையம், பரிசுக்குள் இருக்கும் எத்தனையோ நிலையங்கள் போல்.. சாதாரண நிலையமாக இருந்ததது. தற்போது நகர முதல்வர் ஆன் இதால்கோ, அதன் வெளிப்புற அழகை அடியோடு மாற்றி.. கண்ணைப்பறிக்கும் கொள்ளை அழகாக மாற்றியுள்ளார்.
RATP க்கு சொந்தமானது இந்த Les Halles. ஒக்டோபர் 3 ஆம் திகதி, 1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. முன்னர் Les Halles தனி நிலையமாகவும், Gare de Châtelet தனி நிலையமாகவும் இருந்தது. இதில் Les Halles, RER சேவைகளுக்காகவும் (RER A, RER B, RER D - மூன்று சேவைகள்) Gare de Châtelet மெட்ரோ சேவைகளுக்காகவும் (Line 1, 4, 7, 11, 14 ஆகியவை) இயங்கின. இரு நிலையங்களையும் Line 4 இணைத்துக்கொண்டிருந்தன. இரண்டையும் தனி தனியே வைப்பானேன்.. என யோசித்தவர்கள்.. இரண்டு நிலையங்களையும் இணைத்து "Gare de Châtelet - Les Halles" என மாற்றிவிட்டார்கள்.
Line 4 இல் இருந்து Line 7 க்குச் செல்ல 3,000 அடி தூரம் நடக்கவேண்டும். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம். அடுத்த நிலையமே வந்துவிடும் போல்..!!
பரிஸ் முதலாம் வட்டாரத்தில், நீங்கள் 'சொப்பிங்' செய்ய, மிக சரியான இடம் இதுவேதான். ஆடைகளில் இருந்து ஐபோன் வரை இங்கு அனைத்தும் வாங்கலாம்.. அத்தனை வசதியான 'சொப்பிங்' அனுபவம் இங்கு கிடைக்கும்.
Châtelet மெட்ரோ தொடரூந்து நிலையம் ஆரம்பிக்கப்பட்டது 1900 ஆம் ஆண்டு. 117 வருடங்களாகிவிட்டது. வார நாள் ஒன்றில் சராசரியாக 750,000 பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். இதில் 493,000 பயணிகள் RER சேவைகளுக்காக வருகின்றனர்.
இறுதியாக ஒரு ஆச்சரியமான செய்தி சொல்கிறோம்... நீங்கள் இங்கு ஒரு மணிநேரம் காத்திருக்கிறீர்கள் என்றால்... அந்த ஒரு மணி நேரத்தில் 120 தொடருந்துகள் வந்து செல்வதை அவதானிப்பீர்கள்..!!