Paristamil Navigation Paristamil advert login

மலையாளத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு: 86 வயதான மூதாட்டி அபாரம்

மலையாளத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு: 86 வயதான மூதாட்டி அபாரம்

18 பங்குனி 2025 செவ்வாய் 05:29 | பார்வைகள் : 619


உலக பொதுமறையான திருக்குறளை, மலையாளத்தில் மொழிபெயர்த்த, 86 வயதான பாட்டியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு, எளிம்புலாச்சேரி, முட்டிகுளங்கரை பகுதியை சேர்ந்தவர் ராதா, 86. பள்ளிப்படிப்பு காலத்தில், ஐந்தாம் வகுப்பு வரை மலையாளம் மொழியில் படித்தார்.

அதன்பின், அவரது தந்தை மணி ஐய்யர் தொழில் காரணமாக, தமிழகத்தில், திருமங்கலம் பகுதிக்கு குடும்பத்துடன் குடிப்பெயர்ந்தார். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்தார்.

'பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா' மதுரை நிருபரான, பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி திருமிற்றைக்கோடு பகுதியை சேர்ந்த அச்சுதனை திருமணம் செய்தார். அதன்பின் மதுரையில் வசித்தார்.

பயணங்களை மிகவும் விரும்பும் இவர், கணவர் இறந்த பின், இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ஏராளமான பயணங்கள் மேற்கொண்டார்.

இந்நிலையில், தன் பயணத்தை எளிய மொழியில் விளக்கும் வகையில், புத்தகம் எழுதி வெளியிட்டு வந்த ராதா, தற்போது உலக பொதுமறையான திருக்குறளை மலையாளத்தில் மொழி பெயர்த்து நூலாக வடிவமைத்துள்ளார்.

இந்த நூலின் வெளியீட்டு விழா, பாலக்காடு மாவட்ட நூலக ஹாலில் நடந்தது. மதுரை தியாகராஜ கல்லூரி பேராசிரியர் முனைவர் ஞானசம்பந்தன், எழுத்தாளர் சங்கரநாராயணனுக்கு மலையாள திருக்குறள் நூலை வழங்கி, வெளியிட்டார்.

ராதா கூறியதாவது: கொரோனா காலத்தில் தனிமையில் இருந்த போது, அதிலிருந்து மீள்வதற்கான வழியைத் தேடினேன். அப்போது, தான் திருவள்ளுவரின் திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அறத்துப்பால், பொருட்ப்பால், காமத்துப்பால் என, மூன்று பிரிவுகளாக தயார் செய்த திருக்குறளை, சாமானியருக்கு புரியும் வகையில் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். இதற்கு முன் பிரபல எழுத்தாளர்கள் மூன்று பேர் திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்