பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை

18 பங்குனி 2025 செவ்வாய் 05:39 | பார்வைகள் : 208
21 வயதுடைய சோபிகா, யாழ் பல்கலைக்கழகத்தின் 3 ஆம் வருட மாணவி, மாதவிடாய்த் துவாய்களின் விலையேற்றத்தால் , பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார். " நாங்கள் மாதவிடாய் நாட்களிலும் தொடர்ந்து 5 மணித்தியாலங்கள் வகுப்பில் இருக்க நேரிடும், இதனால் தரமான மாதவிடாய்த் துவாய்களைப் பாவிக்க வேண்டும்.
அதன் விலை 600 ரூபா. வெறும் 8 துவாய்கள் மட்டுமே ஒரு பெட்டியில் இருக்கிறது. மாதாந்தம் இதனைக் கொள்வனவு செய்வதற்கு 1400 ரூபா தேவைப்படுகிறது.
இன்றைய காலப்பகுதியில் இது பெரிய தொகை "என்றார். இவ்வாறு மாதவிடாய் கால சவால்களால்ப் பாதிக்கப்படும் பெண்கள் நாட்டில் அதிகரித்துள்ளனர். மாதவிடாய்; துவாய்களின் விலையேற்றம்,போதிய தெளிவின்மை, பாரம்பரிய நம்பிக்கைகள் போன்றவை மாதவிடாய் வறுமைக்கான காரணமாக உள்ளன.
‘மாதவிடாய் வறுமை’ என்பது பெண்கள் மற்றும் மாதவிடாய் அடையும் அனைவருக்குமான மாதவிடாய் சுகாதார உபயோக பொருட்கள், நீர், கழிப்பறைகள், மற்றும் மருத்துவ சேவைகளை பெற முடியாத நிலை ஆகும்.அத்துடன் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையும், சமூக தடைகளும் இதில் உள்ளடங்கும்.
இலங்கையின் சனத்தொகையில் 51 வீதமானவர்கள் பெண்கள் . நாட்டின் வளர்ச்சியில் பங்குதாரர்களாக சகல துறைகளிலும் பணியாற்றுகிறனர். கல்வி தொழில் , சேவை என பெண்கள் முன்னேறியிருந்தாலும் , அவர்களுக்குரிய சமமான வாய்ப்புகள் மறுக்கப்படுவது இன்னும் தொடர்கிறது. குறைந்த ஊதியம் ,பாலியல் தொல்லைகள், பதவி உயர்வில் பாரபட்சம் என நீண்ட மறுப்புகள் இன்னும் புரையோடியுள்ளன. பெண்களின் எதிர்பார்ப்புகளையும் அவசியமானவற்றையும், சரியாக ஆராய்ந்து தீர்வுகளை பெறுவது சாத்தியமற்றிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
இலங்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மாதவிடாய் வறுமை இனங்காணப்படுகிறது. பாரம்பரிய கலாச்சார இறுக்கங்களால் உண்டான தயக்கம் , மாதவிடாய் பற்றி வெளிப்படையாக பேசுவதற்கு தயங்கும் சமூகத்தை உருவாக்கியிருக்கிறது. இதனை பற்றிய தெளிவும் ,அறிதலின் அவசியமும் மங்கியிருக்கிறது. 2016 - 2019 இல் அற்வகாட்டா நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ,இலங்கையில் 50 வீதமான குடும்பங்கள் மாதவிடாய் துவாய்களை பெறுவதற்குரிய பொருளாதார வாய்ப்பற்றவர்களாக இனங் காணப்பட்டனர் . 2019 இல் இந்த நிலை 40 வீதமாக குறைந்திருந்தது.
காரணங்களும் தீர்வுகளும்
இலங்கையின் பாரம்பரிய இனங்கள் கலாச்சார ,சமய ,பூர்வீக நம்பிக்கைகளை இறுகப்பற்றியவை.
பெண்களின் இயற்கையான உடலியல் மாற்றங்களை ஐதீக நம்பிக்கைகளின் அடிப்படையில் வெளிப்படையற்றதாக பார்க்கிறார்கள்.இதனால் மாதவிடாய் குறித்த விளக்கங்கள் குடும்பங்களூடாக இயல்பாக வழங்கப்படுவதில்லை. பாடசாலைக் கல்வி, உயர் கல்வி, சமூக,சமய அமைப்புகளும் இதனை பேச வேண்டிய விடயமாக பார்ப்பதில்லை. சமய நம்பிக்கைகள் சார்ந்து, மாதவிடாய் என்பது "தீட்டு " என இன்றளவும் நம்பப்படுகிறது.
2020க்கு பின்னரான நாட்டின் பொருளாதார சவால்கள் தனி மனிதர்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2022 இல் ஏற்பட்ட திடீர் விலை உயர்வு மக்களின் நாளாந்த வாழ்க்கை சுமையை இரட்டிப்பாக்கியது. அனைத்து பொருட்களின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்தது. இந்த திடீர் விலைச் சுமை மாதவிடாய் கால உபயோகப் பொருட்களிலும் எதிரொலித்தது. பத்து மாதவிடாய் துவாய்கள் அடங்கிய பெட்டி 2022 ஆம் வருட ஆரம்பத்தில் 140 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. சடுதியாக அதன் விலை 270 ரூபாயை தொட்டது. இந்த விலை மாற்றம் பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இலங்கையில் நடைமுறையில் இருக்கும் சுகாதார பொருட்கள் மீதான வரி, மாதவிடாய் கால உபயோகப் பொருட்களிலும் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது இதன் வரிவீதம் 51வீதமாக உள்ளது. இதனால் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு அத்தியாவசியமான மாதவிடாய் பொருட்கள் மீதான வரி நீக்கப்படுவது இன்றியமையாததாகும்.
விளைவுகளும் தீர்வுகளும்
மாதவிடாய் வறுமை பெண்களின் நாளாந்த வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கல்வி தொழில் என அவர்கள் பங்காற்றும் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாதவிடாய் கால உபயோகப் பொருட்களின் பற்றாக்குறை நீண்ட குறுகிய கால சுகாதார பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.பழைய துணிகள் துவைக்கப்பட்ட மாதவிடாய் துவாய்களால் கடுமையான கிருமி தொற்று ஏற்படும். சிறுநீரகத் தொற்று, பூஞ்சைத் தொற்று, இலகுவான குழந்தைப் பேறின்மை போன்ற நீண்ட காலப் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
குறைந்த வருமானமுள்ள குடும்பங்களிலிருந்து பாடசாலை செல்லும் மாணவிகள் , சீரான மாதவிடாய் உபயோகப் பொருட்கள் இன்மையால் மனரீதியான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் நாட்களில் பாடசாலை செல்வதைத் தவிர்த்தல், சிவப்பு கறை பற்றிய அச்சம், வகுப்பறையில் பயத்துடன் இருத்தல், விளையாட்டு உட்ப்பட்ட இணைபாடவிதான செயற்ப்பாடுகளைத் தவிர்த்தல் போன்ற விளைவுகளை எதிர்கொள்கின்றனர். இதனால் உண்டாகும் நீண்டகாலப் பாதிப்பாக, கற்றலில் இடைவெளி ஏற்ப்படுகிறது.
மேலும் பொதுத்தேர்வுகளில் குறைந்த அடைவுமட்டத்திற்க்கு இட்டுச் செல்கிறது. இவ்வாறு பெண்களின் கல்விவீழ்ச்சிக்கு "மாதவிடாய் வறுமை " காரணமாகிறது.
நாட்டின் பொருளாதாரத்தில், தொழில் ரீதியான பெண்களின் பங்கு அபரிமிதமானது. அரச, தனியார், அரசசார்பற்ற துறைகளில் தம்மை நிரூபித்து வருகிறார்கள். ஆனால் முறைசாரா தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு போதுமான வருமானமும், தொழில் உரிமைகளும் கிடைப்பதில்லை. குறைந்த வருமானம் பெறும் பெண்களால் , மாதவிடாய்க் கால உபயோகப் பொருட்களைப் போதுமான அளவு கொள்வனவு செய்ய முடியாது. இதனால் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்தல், உற்ப்பத்தித்திறன் குறைதல், சோர்வான மனநிலை, போன்றவற்றால் தொழில் முன்னேற்றம் பாதிப்படைகிறது. இறுதியில் சம்பளக் குறைப்பு , வேலை இழப்பினால் உண்டாகும் பாதிப்பு , பெண்தலைமைத்துவக் குடும்பங்களில் வறுமைச் சுழற்ச்சியை ஊக்குவிக்கிறது.
பாதிக்கப்படும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்
மாதவிடாய் வறுமையால் பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் அவர்களின் சமூக ,பொருளாதார , கல்வி , சுகாதார முன்னேற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு சாத்தியப்படும். எனவே பெண்களுக்கான மாதவிடாய் உபயோக பொருட்கள் மீதான வரி நீக்கப்படுவது இன்றியமையாதது. அத்துடன் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்க்கான மாதவிடாய்த் துவாய்களை வழங்குவதற்கான திட்டமொன்றை முன்னெடுப்பதும் அவசியமாகும்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் அதிகமான பெண் தலைமைத்துவ குடும்பங்களை கொண்டிருக்கிறது. இவர்களின் நீண்ட கால சவால்களில் முதன்மையானது பெண் தலைமைத்துவ குடும்பங்களை சுற்றியுள்ள பொருளாதார மற்றும் சமூகச் சவால்கள். கிழக்கு மாகாண சபை தரவுகளின் படி கிழக்கில் 82,204 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இதில் 6,661 பெண்கள் யுத்தத்தால் கணவனை இழந்தவர்கள். 55,338 பெண்கள் இயற்கை காரணங்களால் கணவனை இழந்தவர்கள். அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 31,548 விதவைகளில், யுத்தம் காரணமாக 2,148 பெண்களும், இயற்கை காரணங்களால் 23,315 பெண்களும் கணவனை இழந்தவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 35,337 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
இவற்றில் யுத்தத்தால் 3,069 பெண்களும், இயற்கை காரணங்களால் 21,961 பெண்களும் கணவனை இழந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலும், 15,319 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றில் யுத்தத்தால் விதவைகளான 1,444 பெண்களும், இயற்கைப்பாதிப்புகளால் 10,062 பெண்களும் கணவனை இழந்துள்ளார்கள்.
வடமாகாண சபையால் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான தரவுகளின் படி வட மாகாணத்தில் 75,601 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன. அதன்படி யாழ்மாவட்டத்தில் 44,063 குடும்பங்களும், கிளிநொச்சியில் 9,516 குடும்பங்களும், முல்லைத்தீவில் 7,697 குடும்பங்களும், இனங்காணப்பட்டுள்ளன.
மேலும் மன்னார் மாவட்டத்தில் 6,523 குடும்பங்களும், வவுனியாவில் 7,820 குடும்பங்களும் இனங்காணப்பட்டுள்ளன. இவர்களின் பொருளாதார நிலை ,பல்வேறு சவால்களுக்குக் காரணமாகவுள்ளது. மாதவிடாய் துவாய்களின் அதிகரித்த விலையேற்றம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு பாதிப்பாகிறது.
எனவே பெண்களுக்கான தேவைகளை இனங்கண்டு , குறைந்த வருமானம் உள்வர்களுக்கான " மாதவிடாய்க் கால உபயோகப் பொருட்களை " அரசாங்கம் நிவாரண அடிப்படையில் வழங்குவது சிறப்பானதாகும்.
நன்றி virakesari