ஐ.சி.டி., நிதியில் தமிழக அரசு கோடிகளில் முறைகேடு: கண்காணிப்பு குழு அமைக்க மத்திய அரசிடம் முறையீடு

18 பங்குனி 2025 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 311
மத்திய அரசின் ஐ.சி.டி., நிதியை, தமிழக அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழும் நிலையில், கண்காணிப்பு குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் சசிக்குமார், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிற்கு அனுப்பியுள்ள கடிதம்:
மத்திய அரசின் 'சம்கர சிக் ஷா' திட்டத்தின் கீழ், 'இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி(ஐ.சி.டி.,) நிதியை பெற்று, தமிழகத்தில் உள்ள, 14 ஆயிரத்து, 663 அரசுப் பள்ளிகளில், மாணவர்களின் கணினித் திறனை மேம்படுத்த, உயர் தொழில்நுட்ப ஆய்வகம்(ஹை டெக் லேப்) அமைக்கப்படுகிறது.
ஒரு ஆய்வகத்துக்கு ரூ.6.40 லட்சமும், கணினி பயிற்றுனர் நியமிக்க பள்ளிக்கு ஆண்டுக்கு மதிப்பூதியமாக ரூ.1.80 லட்சம், மின் கட்டணம், இணைய கட்டணம் போன்ற பணிகளுக்கு ரூ.60 ஆயிரம் என, ஒவ்வொரு ஆண்டும் தமிழக பள்ளி கல்வித்துறைக்கு, நிதியாக வழங்கப்படுகிறது.
2008ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 'கம்ப்யூட்டர் இன்ஸ்ட்ரக்டர்' நியமிக்கும்போது, கணினி அறிவியல் பி.எட்., படித்தவர்களை நியமிக்க வேண்டும். நிதியை கணக்கு காட்டுவதற்காக, இதற்கு தகுதி இல்லாதவர்களை நியமிக்கின்றனர்.
இதற்கென, தனியே பாடத்திட்டம், கணினி பயிற்றுனர்கள், செய்முறை தேர்வு என்பன உள்ளிட்ட மத்திய அரசின் நடைமுறைகளை, மாநில அரசு பின்பற்ற வேண்டும். ஆனால், எதையும் பின்பற்றாமல் மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது.
இப்பாடத்தில் பி.எட்., பயின்ற, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். எனவே, தகுதியான இந்த ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, பயிலும் மாணவர்களுக்கு தனியே கணினி அறிவியல் பாடத்திட்டம் இல்லை.
உயர்நிலைப் பள்ளிகளில் கணினி பயிற்றுனர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசின் நிதி, சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.