டாஸ்மாக் போராட்டம்: பா.ஜ., தலைவர்கள் மீது போலீஸ் கெடுபிடி!

18 பங்குனி 2025 செவ்வாய் 12:44 | பார்வைகள் : 321
மதுபானக் கொள்முதலில், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதை கண்டித்து, சென்னை, 'டாஸ்மாக்' அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தை முறியடிக்க போலீசார் மேற்கொண்ட கெடுபிடி நடவடிக்கைகளால், மாநிலம் முழுதும் பா.ஜ.,வினர் அலைக்கழிக்கப்பட்டனர்.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு, மாநிலம் முழுதும், 4,830 சில்லரை மதுபான விற்பனை கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு, தி.மு.க., முக்கிய புள்ளிகள் நடத்தி வரும் ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இதில், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடப்பதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
சோதனை
இதையடுத்து, தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு தொடர்புடைய, எஸ்.என்.ஜெயமுருகனின் எஸ்.என். ஜே., மற்றும் வாசுதேவனின் கால்ஸ் உள்ளிட்ட மதுபானங்கள் தயாரிப்பு ஆலைகள் மற்றும் அதன் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை எழும்பூரில் செயல்படும், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும், மூன்று நாட்கள் சோதனை செய்தனர். இச்சோதனையில், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும், அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த ஊழலை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில் நேற்று, சென்னையில் உள்ள, 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 'டாஸ்மாக்' மதுபான விற்பனை கடைகளையும் முற்றுகையிட போவதாக, அக்கட்சியின் மாநில அண்ணாமலை அறிவித்திருந்தார்.
உத்தரவு
இதையடுத்து, மாநிலம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சட்டசபை நடப்பதால், முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட நேற்று காலை, 6:00 மணிக்கெல்லாம் போலீசார் பணிக்கு வர வேண்டும் என்றும், யாருக்கும் விடுமுறை கிடையாது என்றும் உத்தரவிடப்பட்டது.
எஸ்.பி.சி.ஐ.டி., எனப்படும், உளவுத்துறை போலீசாரும், அதிகாரிகளும், பா.ஜ., மாவட்ட மற்றும் மாநில நிர்வாகி களின் வீடு, அலுவலகங்கள், அவர்களின் கார் எண்கள் உள்ளிட்ட விபரங்களுடன் பட்டியல் தயாரித்தனர். அதன்படி, அந்த இடங்களை கண்காணிக்க, ஒருநாள் முன்னதாகவே போலீசாருக்கு பணி ஒதுக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை, 6:00 மணிக்கே போலீசார் பணிக்கு வந்து விட்டனர்.
அண்ணாமலை கைது
முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகிக்க, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, அக்கரையில் உள்ள வீட்டில் இருந்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று காலை புறப்பட்டார். அவரை சாலையின் நடுவே தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, சென்னை சாலிகிராமம் வீட்டில் இருந்து வெளியே வந்த, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணா நகரில் மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளையும் கைது செய்தனர்.
பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வி.பி.துரைசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், 100க்கும்
மேற்பட்ட தொண்டர்களும் நேற்று காலை, 10:30 மணியளவில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, பஸ், வேன்களில் ஏற்றினர். அப்போது, போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரின் கெடுபிடி காரணமாக, மாநிலம் முழுதும் இதே நிலை ஏற்பட்டது.
கைதான பா.ஜ.,வினரை வாகனங்களில் ஏற்றி, எங்கு கொண்டு செல்கிறோம் என்பதை கூட தெரிவிக்காமல், போலீசார் அலைக்கழித்தனர். போதிய வசதிகள் இல்லாத இடங்களில், மாலை, 7:00 மணிக்கு மேலேயும் தங்க வைத்தனர்.
கைது எண்ணிக்கையை குறைத்து காட்ட, பா.ஜ.,வினரிடம் பெரும் கெடுபிடி காட்டினர். அவர்களை, பஸ் மற்றும் வேன்களில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்று அப்புறப்படுத்தினர். காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் ஜெகதீசன் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் தலைமை செயலகம் முன் திரண்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து, ராயபுரம் பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். மாநிலத்தின் பல இடங்களில், பா.ஜ., நிர்வாகிகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
'ட்ரோன்'கள் பறிமுதல்
ராஜரத்தினம் ஸ்டேடியம் முன், போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை, சிலர், 'ட்ரோன்'கள் வாயிலாக படம் பிடித்தனர். போலீசார், 'ட்ரோன் பறக்க அனுமதி பெற்று இருக்கிறீர்களா' என, கேட்டனர். அதற்கு அவர்கள், 'இல்லை' என்றனர். உடனே, 'அனுமதி பெறாமல் ட்ரோன் பறக்க விடுவது சட்டப்படி குற்றம்' என, அவற்றை பறிமுதல் செய்தனர்.
* வாக்குவாதம் செய்தால் சட்டம் பாயும்
சட்டசபைக்கு சென்று இருந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க, எழும்பூருக்கு ஒரே காரில் வந்தனர். அவர்களை, கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜகுமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, வானதியிடம், ''நீங்கள் பி.என்.எஸ்.எஸ்., சட்டப்பிரிவு, 170ன் கீழ் கைது செய்யப்படுகிறீர்கள்,'' என, விஜயகுமார் தெரிவித்தார். அவரிடம், ''எங்கள் குழுவினர் சற்று தொலைவில் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து கொள்கிறேன். அதன்பின், கைது செய்யுங்கள்,'' என, வானதி கூறினார். அதை விஜயகுமார் ஏற்க மறுத்தார்.
வானதி தொடர்ந்து பேச முயன்றதால், ''என்னிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். மீறினால், உங்கள் மீது, பி.என்.எஸ்.எஸ்., சட்டப்பிரிவு, 172வை பயன்படுத்த வேண்டி இருக்கும்,'' என, விஜயகுமார் தெரிவித்தார். அதன்பின், வானதி கைது செய்யப்பட்டார்.
பி.என்.எஸ்.எஸ்., சட்டப் பிரிவு, 170, மாஜிஸ்திரேட் உத்தரவு மற்றும் வாரன்ட் இல்லாமல் கைது செய்ய வழி வகை செய்துள்ளது. பி.என்.எஸ்.எஸ்., சட்டப் பிரிவு, 172, காவல் துறை அதிகாரியின் உத்தரவுக்கு இணங்க மறுப்போரை உடனடியாக கைது செய்ய, அதிகாரம் அளித்துள்ளது.
மக்கள் பணம் சுரண்டப்படுகிறது
போலீஸ் அடக்குமுறை இருந்தாலும், 'டாஸ்மாக்' ஊழலை வெளியே கொண்டு வருவதில், நாங்கள் சுணங்க மாட்டோம். மக்களுடைய பணம் சுரண்டப்படுகிறது. 1,000 கோடி ரூபாய் என்பது ஆரம்பம்தான். பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊழல் பணத்தை எங்கு கொண்டு போய் கொடுக்க வேண்டுமோ, அங்கே கொடுத்து வருகிறார்.
-தமிழிசை, முன்னாள் கவர்னர்
போராட்டம் தொடரும்
'டாஸ்மாக்' ஊழலில் ஈடுபட்ட திருடனை பிடிக்க வேண்டிய காவல் துறை, இந்த ஊழலை கண்டித்து போராடும் எங்களை கைது செய்கிறது. கைது செய்து, பா.ஜ.,வை பயமுறுத்த முடியாது. எல்லா வகையிலும் எங்களின் போராட்டம் தொடரும்.---- எச்.ராஜா, பா.ஜ., மூத்த தலைவர்