சென்னை தலைநகரா, கொலை நகரா; ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிசாய்ப்பு

18 பங்குனி 2025 செவ்வாய் 17:49 | பார்வைகள் : 293
தொழில் போட்டி, முன் விரோதம் உள்ளிட்ட காரணங்களால், ரவுடிகள் பழிதீர்க்கும் படலம் சென்னையில் தொடர்கிறது. கோட்டூர்புரத்தில் நேற்று இரட்டைக் கொலை நடந்துள்ளது. ஒரே மாதத்தில், அடுத்தடுத்து 12 கொலைகள் நடந்துள்ளதால், சென்னை தமிழகத்தின் தலைநகரமா அல்லது கொலைகளின் நகரமா என்ற பீதி, மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
சில தினங்களாக, சென்னையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெரும்பாலும் தொழில் போட்டி மற்றும் முன் விரோதம் காரணமாக, ரவுடிகள் தங்களின் கதைகளை முடித்துக் கொள்கின்றனர். பகைமை ரவுடிகளின் அடுத்தடுத்த செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க வேண்டிய போலீசார், அப்பணியை முறையாக செய்யாமல் கோட்டை விடுவதால், சென்னை, கொலை நகரமாக மாறி வருகிறது.
கொடூரம்
சென்னை, கோட்டூர்புரம்,சித்ரா நகர், 'யு பிளாக்' குடியிருப்பில் வசித்தவர் அருண், 25; ரவுடி. இவர் மீது, கொலை உட்பட ஆறு வழக்குகள் உள்ளன. அவரது அண்ணன் அர்ஜுனன், 27. சகோதரர்கள் இருவரும்,நேற்று முன்தினம், கோட்டூர்புரத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த ரவுடி சுரேஷுடன் சேர்ந்து, மது அருந்தி உள்ளனர். அதன் பின்னர் இரவு, 9:30 மணியளவில், போதையில், கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள நாகவல்லி கோவில் அருகே, மூவரும் உறங்கினர்.
அப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த எட்டு பேர், அரிவாளால் அருண், சுரேஷை கொடூரமாக வெட்டி விட்டு தப்பினர். வெட்டுப்பட்ட இருவரின் அலறல் கேட்டு எழுந்த அர்ஜுனன், சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றனர். அங்கு சுரேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய அருணை மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், அருண் உயிர் இழந்தார்.
இச்சம்பவம் குறித்து, கோட்டூர்புரம் போலீசார், கொலை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கொலைகள் நடந்த இடம் அருகே உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். நான்கு இரு சக்கர வாகனத்தில் எட்டு பேர் வந்து, அருண், சுரேஷ் ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
எதனால் இந்த கொலைகள்?
சென்னை கோட்டூர்புரம் சித்ரா நகரைச் சேர்ந்த ரவுடி சுக்கு காபி சுரேஷ் என்பவருக்கும், கொலையான அருணுக்கும் தொழில் போட்டி காரணமாக, முன் விரோதம் இருந்துள்ளது. ஒருவரையொருவர் தீர்த்துக்கட்ட நாள் குறித்து செயல்பட்டனர். இவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்து வந்தது.
யார் முந்திக்கொள்வது என்ற போட்டியிலும் இருந்தனர். அந்த வகையில், கடந்த, 2020ல், சென்னை கேளம்பாக்கம் அருகே, காதலி சாயின்ஷா வீட்டில் அருண் பதுங்கி இருப்பது, சுக்கு காபி சுரேஷுக்கு தெரியவந்தது. அங்கு தன் கூட்டாளிகளுடன் சென்று, சாயின்ஷா வீட்டிற்குள் புகுந்து தேடினர். அங்கு, அருண் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.ஆத்திரத்தில் அருணின் காதலி சாயின்ஷாவை தீர்த்துக்கட்டினர்.
உயிருக்கு உயிராக நேசித்த தன் காதலியின் உயிரை பறித்த சுக்கு காபி சுரேஷின் தலையை துண்டித்து கொலை செய்வது என, அருண் சபதம் போட்டு இருந்தார். அதற்காக, படப்பையில் இருந்து ரவுடி சுரேஷ் என்பவரை கோட்டூர்புரத்திற்கு வரவழைத்து, மது விருந்தும் அளித்தார்.இந்த தகவல் எப்படியோ, சுக்கு காப்பி சுரேஷக்கு தெரியவந்தது. அவரது கொலை திட்டத்தில், அருண், அவரதுசகோதரர் அர்ஜுனன் ஆகியோரும் இருந்தனர்.
இவரும் கோட்டூர்புரத்தில், கோவில் அருகே மது போதையில் படுத்து கிடப்பது தெரியவந்தது. அங்கு ரவுடி சுரேஷ் இருப்பது தெரியாது. கூட்டாளிகளுடன் வந்த வேகத்தில், அர்ஜுனன் என்று நினைத்து, படப்பை சுரேஷ், அருண் ஆகியோரை ஆத்திரம் தீர, கொடூரமாக வெட்டி சிதைத்துவிட்டு தப்பினர். கொலைகள் நடந்த இடத்தில் படுத்து கிடந்த அர்ஜுனன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என, போலீசார் கூறினர்.
ஒரு மாதத்தில் நடந்த கொலைகள்
* ஆதம்பாக்கத்தில், தந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கைது.
* பல்லாவரத்தில் ரவுடி அருண்குமார், 25, என்பவரை, மர்ம நபர்கள் ஆறு பேர் கொலை செய்துள்ளனர்.
* ஆவடியில் உணவு தாமதமாக கொடுத்த மனைவியை, கணவரே கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்
* ஏழுகிணறு பகுதியில் பொறுப்பில்லாமல் இருக்கிறாய் என, திட்டிய தந்தையை, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
* கொருக்குப்பேட்டையில், முன்விரோதம் காரணமாக சமையல்காரர் சதீஷ்குமாரை கொலை செய்த சரத்குமார் கைது செய்யப்பட்டார்.
* அம்பத்துாரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஒப்பந்ததாரர் கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் கைது.
* தேனாம்பேட்டையில் கால் டாக்சி ஓட்டுனர் ராஜா என்பவரை கொலை செய்த வழக்கில் மூவர் கைது.
* வடபழநியில் பழைய பேப்பர் சேகரித்து விற்பனை செய்வோர் இடையே நடந்த தகராறில் தாஜ் உசேன், 25 என்பவரை கொலை செய்தவர் கைது
* திரு.வி.க.,நகரில் மதுபோதையில் வீட்டில் தகராறில் ஈடுபட்ட தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
* முகப்பேரில் காதலுக்கு இடையூராக இருந்த காதலியின் தாய் மைதிலி, 63, கழுத்தை நெறித்து கொன்றவர் கைது.