ஸ்டாலின் நடத்தும் மாநாட்டில் பங்கேற்க 20 கட்சிகள் சம்மதம்

19 பங்குனி 2025 புதன் 06:50 | பார்வைகள் : 644
மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதற்கு ஆதரவாக, பல மாநிலங்களை திரட்டும் வகையில் , வரும், 22ம் தேதி சென்னையில் கூட்டு நடவடிக்கைக் குழு மாநாடு நடத்துகிறார். அதில் பங்கேற்க, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 20 கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. மூன்று மாநில முதல்வர்கள் வர உள்ளனர்.
நாட்டில் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதன் முடிவு அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில், தொகுதிகள் எண்ணிக்கை குறையும்; வடமாநிலங்களில் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அரசுக்கு ஆதரவு
இது, தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மக்கள் தொகை அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக, தமிழக அளவில், கடந்த, 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்தது.
பா.ஜ., உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் தவிர்த்து, பெரும்பாலான கட்சி தலைவர்கள் பங்கேற்று அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கூட்டத்தில், லோக்சபாவின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், தற்போது மாநிலங்களுக்கு எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை உள்ளதோ, அதே விகிதத்தில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தவும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுக்கவும், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த, எம்.பி.,க்கள் உள்ள கட்சிகள் அடங்கிய, கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னையில் வரும் 22ம் தேதி, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை நடத்த, முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். இதில் பங்கேற்கும்படி, ஏழு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்.
பின், அந்த மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ., அல்லாத கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து அழைக்க, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவையும் அனுப்பி வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா ஹோட்டலில், வரும் 22ம் தேதி கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடக்க உள்ளது.
இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மவுனம் காக்கிறது
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உட்பட, 20 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து, தி.மு.க., மருத்துவர் அணி செயலர் எழிலன் அளித்த பேட்டி:
முன்கூட்டியே வரும் ஆபத்தை உணர்ந்து, தொகுதி மறுவரையறை தொடர்பாக, ஏழு மாநில முதல்வர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.
மத்திய பா.ஜ., அரசு என்ன சிந்தனையில் உள்ளது என்று கேட்டு, தி.மு.க., - எம்.பி.,க்கள் பார்லிமென்டில் குரல் எழுப்பினர். ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுக்கும்படி கூறினர்; மத்திய அரசு மவுனம் காக்கிறது.
தொகுதி மறுவரையறை என்பது, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகு நடக்கும். கடந்த 1951ல் ஒரு எம்.பி.,க்கு, 4.75 லட்சம் மக்கள் என்ற அடிப்படையில், 494 இடங்கள் இருந்தன.
அதன்பின், 1961 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின், 8.4 லட்சம் மக்களுக்கு ஒரு எம்.பி., என கணக்கிட்டு, 522 தொகுதிகள் வந்தன. அடுத்து, 1971ம் ஆண்டு ஒரு எம்.பி.,க்கு 10.1 லட்சம் பேர் இருந்ததால், 543 எம்.பி.,க்கள் இடம் வந்தன.
கடந்த 1976ம் ஆண்டு, தொகுதி மறுவரையறை பணியை, 25 ஆண்டுகள் தள்ளிவைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்து, 2001ம் ஆண்டு மறுவரையறை செய்ய வேண்டி இருந்தது.
அப்போது கருணாநிதி, சந்திரபாபு நாயுடு ஆகியோர், மறுவரையறையை தள்ளி வைக்கும்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில், 25 ஆண்டுகள் தள்ளி வைக்கப்பட்டது.
அந்த அவகாசம் அடுத்த ஆண்டில் முடிகிறது. எனவே, அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகின்றனர் என்ற, கேள்வி எழுந்துள்ளது. இது நியாயமான கேள்வி. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள் மட்டுமின்றி, பிற மாநில கட்சிகளும், இதை கோடிட்டுக் காட்டி உள்ளன.
848 இடங்கள்
தமிழகத்திற்கு இடங்கள் குறையாது என்கின்றனர். ஆனால், எத்தனை சதவீதம் ஏறும் என்று கேட்கிறோம்.
அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பார்லிமென்டில் எம்.பி.,க்கள் மொத்த எண்ணிக்கை, 848 இடங்களாக அதிகரிக்கப்பட்டால், உத்தரப் பிரதேசத்திற்கு, 80ல் இருந்து 143; பீஹாருக்கு 40ல் இருந்து 79; மத்தியப் பிரதேசத்திற்கு, 29ல் இருந்து 52 ஆக உயரும். அந்த அளவு தென் மாநிலங்களுக்கு உயராது.
இவ்வாறு அவர் கூறினார்.