ஈ.வெ.ரா., குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

19 பங்குனி 2025 புதன் 07:54 | பார்வைகள் : 601
ஈ.வெ.ரா., குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க கோரி, சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், கடலுார் மாவட்டம் வடலுாரில் கடந்த ஜனவரி மாதம், ஈ.வெ.ரா., குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, சீமானுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின்படி, கடலுார், கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை எல்லாம் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சீமான் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன; அது குறித்த எப்.ஐ.ஆர்., எங்கே?' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன' என்றார்.
இதையடுத்து, 'எந்த விபரங்களும் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?' என கேட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.