தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவோம்: பிரேமலதா அறிவிப்பு

19 பங்குனி 2025 புதன் 09:56 | பார்வைகள் : 322
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, என் அடுத்த பிறந்த நாளில் அறிவிப்பேன்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, தன் 56வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாளையொட்டி, கோயம்பேடில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்; தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தின் லோக்சபா தொகுதிகளில் ஒன்றைக் குறைத்தாலும், தமிழக மக்களுக்காக, அரசுடன் சேர்ந்து, தே.மு.தி.க., போராடும். தமிழக மக்கள் நலன் சார்ந்த சில விஷயங்களில், தி.மு.க.,வுடன் இணைந்து செயல்படுவோம். சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து, என் அடுத்த பிறந்த நாளில் அறிவிப்பேன்.
தற்போதைய கூட்டணியில், எந்த குழப்பமும் இல்லை; நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் கட்சியை வளர்க்கும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகிறோம். வரும் ஏப்., மாதத்தில், தருமபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க.,வின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடக்க உள்ளது.
அந்த கூட்டத்தில், தமிழகத்தின், 234 தொகுதிகளுக்கும், பொறுப்பாளர்கள், 'பூத்' கமிட்டி உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து பதவிகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்க உள்ளோம். வரும் தேர்தலில், தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
எந்த கட்சியாக இருந்தாலும், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த, தி.மு.க., அரசு அனுமதி அளிக்க வேண்டும். நான்கு ஆண்டு ஆட்சியில், நிறைகளும், குறைகளும் உள்ளன. எனவே, குறைகள் இல்லை என, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.