சிம்புவுடன் ஜோடி சேரும் கயாடு லோகர்!

19 பங்குனி 2025 புதன் 09:51 | பார்வைகள் : 312
கோலிவுட்டில் தமிழ் நடிகைகளைக் காட்டிலும் பிற மாநிலங்களில் இருந்து வந்த நடிகைகள் தான் அதிகளவில் ஜொலித்துள்ளார். நயன்தாரா முதல் ஜோதிகா வரை பல முன்னணி நடிகைகள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் கயாடு லோகர். இவர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
டிராகன் திரைப்படம் கயாடு லோகரின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. டிராகன் படத்தின் அதிரி புதிரியான வெற்றிக்கு பின் கயாடு லோகருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது அவர் நடிப்பில் இதயம் முரளி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கயாடு. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்
இதயம் முரளி படத்தை தொடர்ந்து மற்றுமொரு பிரம்மாண்ட பட வாய்ப்பை தட்டி தூக்கி இருக்கிறார் கயாடு லோகர். அது தான் சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 திரைப்படம். சிம்பு நாயகனாக நடிக்கும் இப்படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார். இப்படத்தையும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கயாடு லோகர் கமிட்டாகி உள்ளாராம்.
முன்னதாக சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர் நோ சொன்னதை அடுத்து லேட்டஸ்ட் சென்சேஷனான கயாடு லோகரை ஹீரோயினாக கமிட் செய்து உள்ளனர். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துபாயில் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.