விளையாட்டுத்துறைக்கு ஒரு அருங்காட்சியகம்!
11 சித்திரை 2017 செவ்வாய் 14:30 | பார்வைகள் : 18380
இருக்கும் சகல துறைக்கும் ஒவ்வொரு அருங்காட்சியகம் இங்கு உள்ளது என்பது நாம் அறிந்ததே. இதோ... இன்று விளையாட்டுக்கு என பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட Musée National du Sport அருங்காட்சியகம் குறித்து பார்க்கலாம்!!
இந்த அருங்காட்சியகம் பிரான்சின் நீஸ் (Nice) மாவட்டத்தில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் 1922 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டு... நூற்றாண்டைத் தொட உள்ளது. 1940 ஆம் ஆண்டுகளில் இந்த அருங்காட்சியகம் செயலிழந்து பயன்பாட்டுக்கு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டது.
1963 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை நிர்வாகியால் மீண்டும் இந்த அருங்காட்சியகம் தூசி தட்டப்பட்டு... மீண்டும் பார்வையாளர்களுக்காக திறந்துவைக்கப்பட்டது. இப்படி பல காலகட்டங்களில் பல்வேறு பரிணாமங்களுக்கு உள்ளாகி, இன்றுவரை மிக முக்கிய கலைக்கூடமாக இது திகழ்கிறது.
இன்றைய திகதியில் இங்கு, 16 ஆம் நூற்றாண்டு தொடக்கம், தற்போது வரையான காலப்பகுதிகளில் வரை சேகரிக்கப்பட்ட மிக பொக்கிஷமான கலைப்பொருட்கள் (விளையாட்டு தொடர்பானது மட்டும்) இங்கு பத்திரப்படுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் ஒரு இலட்சம் 'மாஸ்ட்டர் பீஸ்!'
கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆண்டு வரை, பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள 93 Avenue de France இல் இருந்தது.., அதன் பின்னர் மீண்டும் நீஸ் நகருக்கே மாற்றப்பட்டது.
1896 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'ஒலிம்பிக்' போட்டியில் வழங்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்கள் இங்கு காட்சிக்கு உள்ளன என்பது ஒரு அட்டகாசமான செய்தி!! தவிர, விளையாட்டு தொடர்பான ஓவியங்கள், புத்தகங்கள், ஆவணங்கள், ஆடைகள் என பல பொக்கிஷங்கள் இங்கு உள்ளன.
விளையாட்டுத்துறையில் பல முன்னேற்றங்களை அடைந்ததுடன், தாம் கடந்து வந்த பாதையை ஆவணப்படுத்திக் கொண்டிருக்கும் செயல் பெருமை மிக்கதுதானே?