சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது; முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

19 பங்குனி 2025 புதன் 10:19 | பார்வைகள் : 258
எந்த குற்றத்தில் ஈடுபடுவர்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது' என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன், 60; சென்னையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி, 2009ல் விருப்ப ஓய்வு பெற்றார். இவர் நேற்று கொலை செய்யப்பட்டார். இது குறித்து சட்டசபையில் அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. சட்ட சபையில் இ.பி.எஸ்., பேசியதாவது: ஜாஹிர் உசேன் வழிமறித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
3 மாதங்களுக்கு முன் உயிருக்கு ஆபத்து என போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. ஜாஹிர் உசேன் புகார் அளித்த போதே விசாரணை செய்திருந்தால் கொலை நடந்திருக்காது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.
இதற்கு பதில் அளித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: விதி 55 கீழ் திருநெல்வேலி முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் உட்பட பலர் உரையாற்றி இருக்கிறார்கள். முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.
கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேர் சரணடைந்த நிலையில் மற்ற எதிரிகளை தனிப்படை அமைத்து போலீசில் தேடி வருகின்றனர். கொலையுண்ட ஜாஹிர் உசேன் முன்பு, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜாஹிர் உசேனுக்கும், அருகே வசித்து வந்த கிருஷ்ண மூர்த்தி என்பவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்த கொலை வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள், அவர்களுக்கு பின்னணியில் இருந்த அனைவரும் பாரபட்சமின்றி நீதியின் முன்னிறுத்தப்படுவார்கள் என்பதை இந்த அவைக்கு தெரிவித்து கொள்கிறேன். சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள, இந்த அரசு அனுமதிக்காது. இந்த கொலை வழக்கில் மட்டுமின்றி, எந்த குற்றத்தில் ஈடுபவர்களாக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.