பொது இடங்களில் தி.மு.க, கொடிகள்: அகற்ற பொதுச்செயலர் உத்தரவு

20 பங்குனி 2025 வியாழன் 06:07 | பார்வைகள் : 209
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை ஏற்று, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க., கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்' என, அக்கட்சியினருக்கு பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி, மத ரீதியிலான கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த ஜன., மாதம், 27ம் தேதி உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும், அந்தத் தீர்ப்பு, கடந்த 6ம் தேதி உறுதி செய்யப்பட்டது.
எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும்,- பொது இடங்களிலும் வைத்துள்ள தி.மு.க., கொடிக் கம்பங்களை, தாங்களே முன்வந்து, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.
அகற்றப்பட்ட கொடிக் கம்பங்களின் விபரங்களை, கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், தங்களுக்கு கிடைக்கும் இடங்களில்எல்லாம் கொடி, பேனர் என அமைத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வந்தன.
இது குறித்து பலமுறை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியும் அதை எந்த கட்சியினரும் கண்டுகொண்டதில்லை. கடந்த வாரம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பை அடுத்து, முதன் முறையாக, தி.மு.க., மேலிடம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.