தரம் தாழ்ந்து பேசுவதா? அண்ணாமலைக்கு த.வெ.க., கண்டனம்

20 பங்குனி 2025 வியாழன் 12:13 | பார்வைகள் : 446
கைது செய்ய வேண்டிய இடத்தில் உள்ள பா.ஜ.,வினரே தமிழகத்தில் ஏன் மதுபான ஊழலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என கண்ணியமான, மரியாதையான வார்த்தைகளில் தான் த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்திருந்தார். ஆனால் அண்ணாமலை தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து த.வெ.க., தலைவர் விஜய்யை பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது'' என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மதுபான ஊழல் விஷயத்தில் சிக்கியவர்களை, கைது செய்ய வேண்டிய இடத்தில் பா.ஜ., அண்ணாமலை உள்ளார். ஆனால் அவர் தமிழகத்தில் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதாகிறார். இதைத்தான் எங்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை தலைவர் விஜய் பற்றி, 'இடுப்பை கிள்ளுபவர்' என தவறாக பேசியுள்ளார்.
கதைகளை, காவியங்களை மட்டுமல்ல கடவுளையும் சாமானிய மனிதர்களுக்கு தத்ரூபமாக காட்டியது சினிமா தான். ஆனால் சினிமா என்றால் இடுப்பை கிள்ளுவது தான் அண்ணாமலை நினைவுக்கு வந்துள்ளது. ஹேமமாலினி, கங்கனா ரனாவத், சுரேஷ்கோபி, சரத்குமார் என சினிமா கலைஞர்கள் பா.ஜ.,வில் நிரம்பியுள்ளனர்.
வானதி, தமிழிசை போன்ற பெண் தலைவர்களே அண்ணாமலையின் இந்த பேச்சை கேட்டு முகம் சுளித்திருப்பார்கள். இனிவரும் காலத்தில் இதுபோன்று பேசாமல் இருப்பது அண்ணாமலைக்கும் நல்லது, அவர் பதவிக்கும் நல்லது என்றார்.