ஒரே அணியில் பா.ஜ., - தி.மு.க.,: சீமான் குற்றச்சாட்டு

20 பங்குனி 2025 வியாழன் 15:15 | பார்வைகள் : 413
இயற்கைக்கு எதிரான முதலாளித்துவ கோட்பாட்டில் பா.ஜ.,வும், தி.மு.க.,வும் ஒரே அணியாய் நிற்கின்றன' என நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நீலகிரி மாவட்டம் சில்லகல்லா நீரேற்று மின் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இவை அடர்ந்த காடுகள், 800 ஏக்கர் நிலத்தை மூழ்கடிக்கிறது. இத்திட்டப்பகுதி முக்கூர்த்தி தேசிய பூங்கா, முதுமலை - மூக்கூர்த்தி புலிகள் வழித்தடம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகே உள்ளது. பெரிய அணைகள், சுரங்கப் பாதை அமைப்பது நில அதிர்வுகளையும், நிலச் சரிவையும் ஏற்படுத்தலாம். மேலும் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் வீடுகளை இழக்க நேரிடும்.
இதன் ஆபத்தை உணர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். இது போன்ற அழிவு திட்டத்தை மக்கள் மீதும் இயற்கை மீதும் திணிக்க முற்படும் தி.மு.க., அரசு மேடைகளில் பருவநிலை மாற்றம் குறித்து பேசினால் எல்லாம் மாறிவிடுமா.
மத்திய பா.ஜ., அரசு கொண்டு வரக்கூடிய அழிவு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி துணையாய் செயல்பட்டு வருவதன் வழியே பா.ஜ.,வும், தி.மு.க.,வும் இயற்கைக்கு எதிரான முதலாளித்துவ கோட்பாட்டில் ஒரே அணியாய் நிற்கின்றன. எனவே சில்லகல்லா புனல் மின்சார திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.