மும்மொழிக்கு ஆதரவாக 20 லட்சம் பேர் கையெழுத்து!

20 பங்குனி 2025 வியாழன் 16:16 | பார்வைகள் : 376
தமிழக பா.ஜ., சார்பில், தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற கையெழுத்து இயக்க நிகழ்ச்சி, சென்னையில் நடந்து வருகிறது.
இதற்காக, பா.ஜ., நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று, மக்களிடம் நேரடியாக கையெழுத்து பெறுகின்றனர். மேலும், 'புதிய கல்வி' எனும் இணையதளம் வாயிலாக, டிஜிட்டல் முறையிலும் கையெழுத்து பெறப்படுகிறது. வரும் மே மாதத்திற்குள், ஒரு கோடி கையெழுத்து பெற்று, அதை ஜனாதிபதியிடம் வழங்க பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
நேற்று வரை, 20.33 லட்சம் பேரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன; 7.12 லட்சம் பேர் இணையதளம் வாயிலாகவும்; 13.21 லட்சம் பேர் நேரடியாகவும் கையெழுத்திட்டுள்ளனர்.
இது குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், 'நம் வருங்கால தலைமுறையினருக்கு, தரமான, சமமான மும்மொழிக் கல்வி வேண்டும் என, ஆர்வத்துடன் சமக்கல்வி கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்றுள்ள, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நன்றி' என, தெரிவித்துள்ளார்.