தொடரூந்து நிலையத்தை துளைத்துக்கொண்டு வெளியே வந்த தொடரூந்து!
9 சித்திரை 2017 ஞாயிறு 10:30 | பார்வைகள் : 18427
இந்த பதிவின் தலைப்பு ஒரு சூடான செய்தியாக இருந்தது... எப்போது என்றால் 1895 ஆம் ஆண்டு! இப்போது அது 'பிரெஞ்சு புதினம்!' கடந்த வாரம் Montparnasse தொடரூந்து நிலையம் குறித்து பிரெஞ்சு புதினம் வெளியிட்டிருந்தோம். இந்த தொடரூந்து நிலையம் என்றாலே இந்த புகழ்பெற்ற விபத்து தான் கண்முன்னே வந்துபோகும்.
1895 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி, மாலை 4 மணி. தொடரூந்து நிலையத்தில் பயணிகளின் வருகைக்காகவும், பயணம் மேற்கொள்ளவும் பலர் காத்துக்கொண்டிருந்தனர். பதினைந்து நிமிடத்துக்கு முன்பே Montparnasse நிலையத்துக்கு வந்து சேர்ந்திருக்கவேண்டிய Granville–Paris எக்ஸ்பிரஸ் சேவை வந்து சேரவில்லை.
தொடரூந்தில் இருந்த சாரதிக்கு தாமதமாக வந்துகொண்டிருக்கிறோம் எனும் பதட்டம். உச்சவேகத்தில் தொடரூந்தை செலுத்துகிறார். அன்று காலை 8.45 மணிக்கு Granville தொடரூந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட தொடரூந்து அது... 3.30 மணிக்கெல்லாம் பரிசை வந்தடைந்திருக்கவேண்டும். தொடரூந்தில் 131 பயணிகள்.
தொடரூந்து 40 தொடக்கம் 60 கி.மீ வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. (கவனிக்க : 1895 ஆம் ஆண்டு...) அப்போதெல்லாம் தொடரூந்தின் அதிகபட்ச வேகம் அதுவாகத்தான் இருந்தது. இதோ இன்னும் சில நொடிகளில் Montparnasse தொடரூந்து நிலையத்தை வந்தடைய இருக்கிறது.
தொடரூந்து நிலையத்துக்குள் அதே வேகத்தில் நுழைந்த தொடரூந்தின் 'பிரேக்' காலை வாரியது. தக்க சமையத்தில் 'பிரேக்' செயலிழக்க... தொடரூந்து சாரதிக்கு என்ன செய்வதென தெரியவில்லை. அதற்குள் தொடரூந்து தன் எல்லையை தொட்டது. இரும்பிலான தொடரூந்து இயந்திரத்தின் முன் பாகம் அந்த 60 செண்டிமீட்டர் அகலம் உள்ள மதிலை இடித்து தள்ளி உடைத்து வெளியே பாய்ந்தது. தொடரூந்து நிலையத்தின் கட்டிடத்தை இடித்துக்கொண்ட Granville எக்ஸ்பிரஸ், வீதியை எட்டிப்பார்த்த நிலையில் தன் ஓட்டத்தை நிறுத்தியது !
வெளியே பாய்ந்த இஞ்சின் பெட்டி, Place de Rennes மேல் விழுந்தது. அங்கு பணிபுரிந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். இப்படி ஒரு விபத்து ஏற்படும் என இந்த உலகம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டதில்லை! தொடரூந்தில் பயணம் செய்த பயணிகளில் சிலர் காயமடைந்தனர்.
இந்த விபத்தை ஒரு புகைப்படமாக பதிவு செய்தார் ஒரு கலைஞர். அது உலகப்புகழ் அடைந்தது!! அப்போது இந்த நிலையம் Gare de l'Ouest எனும் பெயரில் இருந்தது. புகைப்படத்தில் அதை கவனிக்கலாம்!!