Paristamil Navigation Paristamil advert login

தி.மு.க., கூட்டணியில் சேர தே.மு.தி.க., ரகசிய பேச்சு

தி.மு.க., கூட்டணியில் சேர தே.மு.தி.க., ரகசிய பேச்சு

21 பங்குனி 2025 வெள்ளி 06:08 | பார்வைகள் : 1933


தி.மு.க., கூட்டணியில் சேர காய் நகர்த்தி வரும் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, சமீப நாட்களாக தமிழக அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகிறார்.

சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள், ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டு, மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசிய தகவலும் வெளியாகி உள்ளது.

தே.மு.தி.க., தற்போது வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனாலும், அக்கட்சிக்கு எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் இல்லை. அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட போதிலும், தொடர் தோல்வியையே சந்தித்து வருகிறது.

அதோடு, அக்கட்சியிடம் பெரிதும் எதிர்பார்த்த ராஜ்யசபா எம்.பி., பதவியும் கிடைக்காது என தெரியவந்துள்ளதால், தன் மகனின் எதிர்காலம் கருதி, தி.மு.க., பக்கம் திரும்பி விட்டார் பிரேமலதா.

லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று, அரசின் முடிவுக்கு தே.மு.தி.க., ஆதரவு தெரிவித்தது.

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை வரவேற்பதாக பிரேமலதா தெரிவித்தார்.

பிரேமலதாவின் மன மாற்றத்திற்கு, தி.மு.க.,வில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் நடத்திய கூட்டணி பேச்சு தான் காரணம் என சொல்லப்படுகிறது.

இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த தேர்தல்களில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைந்திருந்தால், தே.மு.தி.க.,வுக்கு சட்டசபையிலும், லோக்சபாவிலும் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும். அ.தி.மு.க.,விடம் போய் அனைத்தும் இழந்து விட்டோம் என எண்ணுகிறார் பிரேமலதா.

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவுக்கு, இந்த முறை ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குவதற்கு பதிலாக, தே.மு.தி.க.,வுக்கு வழங்குவதன் வாயிலாக, நாயுடு சமுதாயத்தினரின் ஓட்டுகளை தக்க வைக்கும் வாய்ப்பு தி.மு.க.,வுக்கு இருக்கிறது. சட்டசபை தேர்தலில், இரட்டை இலக்கத்தில் தே.மு.தி.க.,வுக்கு 'சீட்' கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

வர்த்தக‌ விளம்பரங்கள்