Paristamil Navigation Paristamil advert login

அர்ச்சுனாவுக்காக சபையில் மன்னிப்பு கோரிய சிறீதரன்!

அர்ச்சுனாவுக்காக சபையில் மன்னிப்பு கோரிய சிறீதரன்!

21 பங்குனி 2025 வெள்ளி 10:11 | பார்வைகள் : 860


அர்ச்சுனா எம்.பி தவறாக பேசியிருந்தால் சபையில் நான் மன்னிப்பு கோருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அதன்போது சிறீதரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் சபாநாயகரால் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீதான தடைகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 8 நாட்களுக்கு அவருடைய பேச்சுகளை ஒளிபரப்பு செய்யப்படாமலும், ஹன்சாட்டில் பதியப்படாமல் இருப்பதற்கான செய்திகளை சபாநாயகர் அறிவித்திருந்தார். அவர் பாராளுமன்றத்திற்கு பொருத்தமில்லாத சொற்களை பயன்படுத்தியிருந்தார் என்று கூறப்பட்டது. இந்த சீருயர் சபையின் பொறுப்பாளர் என்ற வகையில் அவர் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நாங்கள் நடக்கின்றோம்.

ஆனால் சபையை பயன்படுத்தி பெண்கள் மீதான அல்லது பெண்களுக்கு எதிரான வன்மங்களை கொண்டு வருவதையோ அல்லது ஒரு சமயம் சார்ந்து, மார்க்கம் சார்ந்து இருக்கின்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக வன்மங்களை கொடுவதையோ நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எங்களுக்கும் முஸ்லிம் சகோததர்களுக்கும் இடையே நீண்ட கால அந்நியோன்ய உறவு உண்டு, கடந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட மனக் கசப்புகளை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்வது அல்லது அதனை தோண்டிப் பார்ப்பதல்ல இப்போதைய நோக்கம். நாங்கள் தமிழ் பேசும் மக்களாக அவர்களுடைய மார்க்கம், சம்பிரதாயம், கலாச்சாரங்களை மதித்து நடப்பவர்களே. அதற்கு எதிரானவர்களும் அல்ல.

அர்ச்சுனா எம்.பி பேசிய சில விடயங்களில் தவறுகள் இருக்கலாம். அவ்வாறு தவறுகள் இருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் அதற்காக மன்னிப்பு கேட்கின்றோம். முஸ்லிம் மக்கள் அதனை பெரிய விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது எமது வினயமான வேண்டுகோளாகும்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக அர்ச்சுனாவுக்கான தடை இந்த பாராளுமன்றத்தில் முதன் முதலில் வந்துள்ளமை ஆரோக்கியமான விடயமா என்று யோசிக்கின்றேன். நான் நீண்ட நேர ஆய்வுகளின் பின்னர் இந்த பதிவை நான் செய்கின்றேன். பாராளுமன்ற உறுப்பினர் மீதான குற்றம் இன்னும் எத்தனையோ பேருக்கு பாயலாம்,  இது தேசிய நல்லிணக்கத்திற்கு பாதிப்பாகலாம் என்ற வார்த்தைகள் சில தேடல்களை நோக்கி நகர்த்தியது என்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்