Château d'If - பிரான்சில் ஒரு அந்தமான் தீவு!!
4 சித்திரை 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18621
அந்தமான் தீவு பற்றி தெரிந்திருக்கும்... அது ஒரு தனித்தீவு.. ஒரு சிறைச்சாலையும் கூட... இங்கிருந்து குற்றவாளிகள் தப்பிச்செல்வதற்கு வாய்ப்பே இல்லை! அதுபோல் பிரான்சிலும் ஒரு தீவு உள்ளது. Château d'If தீவு குறித்து இனி நீங்கள் தெரிந்துகொள்ளப்போவதெல்லாம் ஆச்சரியம் தான்!! வாருங்கள்...!!
Marseille இல் உள்ளது இந்த தீவு. பிரான்சின் மத்தியத்தரைக் கடலில் உள்ள நான்கு தீவுகள் கொண்ட பகுதியை Frioul archipelago என அழைக்கிறார்கள். அதில் ஒரு தீவு தான் Château d'If. 3 ஹெக்டேயர்கள் அளவு மட்டுமே கொண்டுள்ள குட்டித்தீவு. முன்னர் அது கோட்டையாக இருந்து, தற்போது சிறைச்சாலையாக உள்ளது.
1516 ஆம் ஆண்டு முதலாம் Francis மன்னன் இந்த தீவுக்குச் செல்கிறான். 'ஆஹா... என்ன அற்புதமான இடம்!' என அந்த தீவு அவனுக்கு பிடித்துவிடுகிறது. பின்னர், 1524 ஆம் ஆண்டில் இருந்து 1531 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் இங்கு ஒரு கோட்டை மேற்குறிப்பிட்ட மன்னரால் கட்டுவிக்கப்படுகிறது. அது 90 அடி உயரம் கொண்ட 'முரட்டுக்' கோட்டை!!
கோட்டை கட்டப்பட்டு, பாதுகப்பு பலப்படுத்தப்பட்டு.. 'எவன் வந்தாலும் சுட்டுத்தள்ளுங்கள்!' என ஆணை பிறப்பிக்கப்பட்ட நேரம்... என்ன கெட்ட காலமோ... இதுவரைக்கும் ஒரு யுத்தத்தைக் கூட சந்திக்கவில்லை இந்த கோட்டை! பின்னே... தனித்தீவில் கோட்டை கட்டினால் யார்தான் வந்து சண்டையிடுவார்கள் மிஸ்ட்டர் முதலாம் Francis??
சண்டையிட வருவதற்கு யாரும் துணியவில்லை என்றபோதுதான்... அந்த சிந்தனை உதித்தது... முக்கிய குற்றவாளிகளை இங்கே சிறை வைக்கலாம் என... மீட்டுச்செல்ல யாரும் வரமாட்டார்கள் எனும் நம்பிக்கையில்! 1871 ஆண்டுகளில் எல்லாம் இங்கு 3500 கைதிகள் இருந்தார்கள் என்றால் பாருங்களேன்!
19 ஆம் நூற்றாண்டில் எழுத்தாளர் Alexandre Dumas தன்னுடைய The Count of Monte Cristo நாவலில் இந்த தீவை மிக முக்கிய இடமாக குறிப்பிடுகிறார். தீவு - உலகப்புகழ் அடைகிறது. இந்த நாவல் குறித்து பின்னர் ஒருநாளில் சொல்கிறோம்.
பின்னர், 23 செப்டம்பர் 1890 ஆம் ஆண்டு, இந்த தீவு பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. நீங்கள் ஒரு குட்டி படகில் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம்!!