பிரதமர் மோடியின் 38 வெளிநாட்டு பயணங்கள்; செலவு விபரங்கள் இதோ!

21 பங்குனி 2025 வெள்ளி 22:18 | பார்வைகள் : 320
கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பிரதமர் மோடி மேற்கொண்ட அரசு முறைப் பயணங்களுக்கு மொத்தமாக ரூ.259 கோடி செலவானதாக ராஜ்யசபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கையை ஏற்று மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பபித்ரா மார்ஹெரிட்டா ராஜ்சபாவில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகள் குறித்து எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்தார்.
அவர், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் 2024ம் ஆண்டு வரை பிரதமர் நரேந்திர மோடியின் 38 வெளிநாட்டுப் பயணங்களுக்காக கிட்டத்தட்ட ரூ.258 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை அமெ ரிக்கா, போலந்து, உக்ரைன், ரஷ்யா, இத்தாலி, பிரேசில், கயானா, ஜெர்மனி, குவைத், டென்மார்க், பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உஸ்பெகிஸ்தான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, எகிப்து, தென் ஆப்பிரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணமாக சென்றுள்ளார்.
ஜூன் 2023ல் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்காக ரூ.22 கோடிக்கு மேல் செலவிடப்பட்டது. மற்ற நாடுகள் விபரம் வருமாறு:
போலந்து: ரூ. 10,10,18,686
உக்ரைன்: ரூ. 2,52,01,169
ரஷ்யா: ரூ. 5,34,71,726
இத்தாலி: ரூ. 14,36,55,289
பிரேசில்: ரூ. 5,51,86,592
கயானா: ரூ. 5,45,91,495
ஜப்பான்: ரூ.33 கோடி
ஜெர்மனி: ரூ.23.9 கோடி
ஐக்கிய அரபு அமீரகம்: ரூ.12.7 கோடி
பிரதமர் மோடி 2022ம் ஆண்டில் 8 நாடுகளுக்கும், 2023ல் 10 நாடுகளுக்கும், 2024ல் 16 நாடுகளுக்கும் அரசு முறைப் பயணம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.