Paristamil Navigation Paristamil advert login

ஊழலை மறைப்பதற்காக மொழியின் பெயரால் நஞ்சை பரப்புவதா? அமித் ஷா

ஊழலை மறைப்பதற்காக மொழியின் பெயரால் நஞ்சை பரப்புவதா? அமித் ஷா

22 பங்குனி 2025 சனி 15:46 | பார்வைகள் : 1944


மொழியின் பெயரால் அரசியல் செய்ய தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். மொழியை வைத்து மக்களிடம் நஞ்சை பரப்புகின்றனர். தங்களது ஊழல்களை மறைப்பதற்காகவே, மொழி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்; அவர்களை அம்பலப்படுத்துவோம்.

வரும் டிசம்பர் மாதம் முதல், பொதுமக்கள், முதல்வர்கள், எம்.பி.,க்கள் என அனைத்து தரப்புக்குமே என் தகவல் தொடர்புகளை, அவரவர் தாய்மொழிகளிலேயே எழுதப் போகிறேன்,'' என, ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

ராஜ்யசபாவில் நேற்று உள்துறை அமைச்சகம் மீதான விவாதத்தின்போது, ம.தி.மு.க., - எம்.பி., வைகோ பேசும்போது, ''பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்கக் கூடிய பொறுப்பில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர், தமிழகத்தை பழி வாங்குகிறார்.

காரணம், உங்களது ஹிந்துத்துவா கொள்கைக்கு நாங்கள் எதிராக இருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ்.,சின் செயல்திட்டங்களுக்கு எதிராக தமிழகம் இருப்பதால் இவ்வாறு செய்கிறீர்கள்.

ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை தமிழகம் எதிர்ப்பதும், உங்கள் நடவடிக்கையின் பின்னணிக்கு காரணமாக உள்ளது. ஹிந்திக்கு இலக்கணம் கிடையாது. இலக்கியங்களே இல்லாத மொழியும் கூட. அது, மிகவும் கடினமான மொழி,'' என்றார்.

அலுவல் மொழி


அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசும்போது, ''இந்தியாவின் அலுவல் மொழியாக தமிழை ஆக்க வேண்டும். இது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க.,வின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது,'' என்றார்.

தி.மு.க., - எம்.பி.,சண்முகம், ''ஹிந்தியை மறைமுகமாக திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 2023ல் கொண்டு வரப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டங்களுக்கான பெயர்களைக்கூட சமஸ்கிருதத்தில் மத்திய அரசு சூட்டியது.

''தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது,'' என்றார்.

இந்த விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:


மொழி விவகாரத்தை வைத்து தி.மு.க.,வினர் அரசியல் செய்யப் பார்க்கின்றனர். அவர்கள் செய்துள்ள ஊழலை மறைப்பதற்காக மொழி விவகாரத்தை கையில் எடுத்து பிரச்னை செய்ய முயற்சிக்கின்றனர். ஒவ்வொரு மொழியும் இந்த நாட்டினுடைய ஒவ்வொரு ஆபரணங்களை போன்றவை.

தி.மு.க.,வின் நிஜமான நோக்கம் என்ன? தென் மாநிலங்களைச் சேர்ந்த எல்லா மொழிகளுக்கும் நாங்கள் எதிரிகள் என்று சொல்லப் பார்க்கிறீர்களா; அது எப்படி சாத்தியம்? நான் குஜராத்தில் இருந்து வருகிறேன்.

நிர்மலா சீதாராமன் தமிழகத்திலிருந்து வந்துள்ளார். எனவே, மொழியை அடிப்படையாக வைத்து, யாரெல்லாம் அரசியல் செய்ய திட்டமிட்டுள்ளனரோ, அவர்கள் அனைவருக்குமே அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.

பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகளை, தாய் மொழியான தமிழில் மொழி மாற்றம் செய்வதற்கு உரிய தைரியமோ, துணிச்சலோ உங்கள் அரசுக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

ஆனாலும், மொழியின் பெயரால் மக்கள் மத்தியில் நஞ்சை பரப்புகிறீர்கள்.

பல ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு அப்பால் இருந்து வரும் மொழியை ஆதரிப்பீர்கள்; ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால், இந்தியாவின் மொழிகளில் ஒன்றை ஏற்க மாட்டீர்களா?

வரும் டிசம்பர் மாதம் முதல், பொதுமக்கள், முதல்வர்கள், எம்.பி.,க்கள் என அனைத்து தரப்புக்குமே என் தகவல் தொடர்புகள் அனைத்தையும், அவரவர் தாய்மொழிகளிலேயே இருக்கும்படி எழுதி தொடர்பு கொள்ளப் போகிறேன்.

மொழியை வைத்து, தங்களது ஊழல்களை மறைக்க பார்ப்பவர்களுக்கு இதுதான் என் உறுதியான பதிலடி.

மொழியின் பெயரால் இந்த நாட்டை நீங்கள் பிளவுபடுத்த நினைக்கக் கூடாது. உங்களுடைய தவறான நடவடிக்கைகள் மற்றும் உங்களுடைய ஊழல்கள் ஆகியவற்றை மறைக்கப் பார்க்கிறீர்கள். அதற்கு ஒரு வசதியான ஆயுதமாக, மொழியை கையிலெடுத்து பிரச்னை செய்கிறீர்கள்.

ஆதாயம் தேடாதீங்க


நீங்கள் வளர்ச்சியை பற்றி பேச வேண்டும். அதை விடுத்து, இதுபோன்ற மொழி அடிப்படையிலான விஷயங்களை மக்கள் மத்தியில் பரப்பி ஆதாயம் தேடக்கூடாது.

ஹிந்தி, பிற மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல. இந்தியாவின் பிற அனைத்து மொழிகளுக்குமான நட்பு மொழிதான் ஹிந்தி.

மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு பதிலாக, அந்த மொழிகளுக்கு ஆதரவாகவே ஹிந்தி இருந்து வருகிறது.

மோடி தலைமையிலான மத்திய அரசு, அலுவல் மொழிகளுக்கான துறையின் கீழ், இந்திய மொழிகளுக்கான பிரிவை அமைத்து, தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, அஸாமி, பெங்காலி போன்ற மொழிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வரும்போது பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து பாடங்களையும் தமிழிலேயே கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்களை நிச்சயம் அம்பலப்படுத்துவோம். ஒவ்வொரு கிராமத்திற்கும் மூலை முடுக்கெல்லாம் சென்று உங்களுடைய தவறான நடவடிக்கைகளை மக்களிடம் பிரசாரம் செய்து, நீங்கள் யார் என்பதையும், உங்களுடைய உண்மையான முகம் எது என்பதையும் நிச்சயம் வெளிச்சம் போட்டு காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்