Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் மரணம் - வேன் எரிப்பு

இலங்கையில் துப்பாக்கிச்சூட்டில் 2 இளைஞர்கள் மரணம் - வேன் எரிப்பு

22 பங்குனி 2025 சனி 07:26 | பார்வைகள் : 312


மாத்தறை - தெவுந்த, சிங்காசன வீதியில் நேற்று (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T-56 மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று​ தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் நீதவான் விசாரணை, மாத்தறை மேலதிக நீதவான் மாலன் சிரான் ஜயசூரிய அவர்களால் இன்று (22) அதிகாலையில் நடத்தப்பட்டது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்