Paristamil Navigation Paristamil advert login

டாஸ்மாக் ஊழலை மறைக்க தொகுதி மறுசீரமைப்பை பூதாகாரமாக்குகிறது தி.மு.க.,: நிர்மலா சீதாராமன்

டாஸ்மாக் ஊழலை மறைக்க தொகுதி மறுசீரமைப்பை பூதாகாரமாக்குகிறது தி.மு.க.,: நிர்மலா சீதாராமன்

23 பங்குனி 2025 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 267


லோக்சபா தொகுதி மறுவரையறை இப்போதைக்கு வராது என்பது தெரிந்தும், டாஸ்மாக் ஊழல், போதைப் பொருள் கடத்தல், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றை மூடி மறைக்க, 'இண்டி' கூட்டணியை தக்க வைத்துக்கொள்ள, இப்பிரச்னையை, தி.மு.க., கையில் எடுத்துள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:

தற்போது, 'இண்டி' கூட்டணி வலுவிழந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில், கூட்டணியை தலைமையேற்று நடத்த, திறமையான தலைவர்கள் இல்லை. ஒவ்வொரு கட்சி யும் கழன்று வருகிறது.

இதே நிலை நீடித்தால், கூட்டணியில் தி.மு.க.,வும், காங்கிரசும் தான் மிஞ்சும். எனவே, இண்டி கூட்டணியை சிதற விடக் கூடாது என தி.மு.க., நினைக்கிறது.

பொய் பிரசாரம்


மேலும், அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளது. எனவே, தொகுதி மறுவரையறை குறித்து, தி.மு.க., பேசுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில், மக்களுக்கு என்ன செய்தோம் என்று கூற எதுவும் இல்லை. சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அடைந்துஉள்ளது.

மேற்கு வங்கத்தில் பெண் டாக்டர் கொலை, நாடு முழுதும் பேசப்பட்டது. ஆனால், அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தை மறைத்து விட்டனர். நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைக்கும் கட்சி எனக் கூறும், தி.மு.க., கள்ளக்குறிச்சி இறப்பு சம்பவத்தை கண்டுகொள்ளவில்லை.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட, தி.மு.க.,வை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவருடன் இணைந்து, முதல்வரின் குடும்ப உறுப்பினர் திரைப்படம் எடுத்துள்ளார். இது 2026 தேர்தலில் எதிரொலிக்கும்.

இதை மறைக்க, தமிழ் பற்று, ஹிந்தியை திணிக்கின்றனர் என, மீண்டும் மொழி பிரச்னையை துவக்கி உள்ளனர்.

நான் பள்ளி படிக்கும் போதிலிருந்து, இதே பொய் பிரசாரத்தை செய்து வருகின்றனர். தி.மு.க., தமிழை வளர்க்கவில்லை; அதை மறைக்க, ஹிந்தியை திணிப்பதாக சொல்கிறது. தி.மு.க.,வின் இயலாமை, ஊழல் போன்றவை வெளிவந்து விட்டன.

டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய், ஊழல் நடந்துள்ளது. இதை மறைத்து, தேர்தலை சந்திக்க, தொகுதி மறுவரையறையை பூதாகாரமாக்குகின்றனர். 'எந்த ஒரு மாநிலத்திற்கும் அநியாயம் நடக்காது' என, கடந்த ஆண்டே பிரதமர் கூறி விட்டார்.

பண மூட்டை


தொகுதி மறுவரையறை நடக்க வேண்டும் என்றால், முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அதன்பின், தொகுதி மறுவரையறை கமிஷன் அமைக்க வேண்டும். அந்த கமிஷன், ஒவ்வொரு மாநிலமாக சென்று கருத்து கேட்கும்.

அதன் அடிப்படையில், முடிவு செய்யும். இதற்கு ஓராண்டுக்கு மேல் கூட ஆகலாம். ஒவ்வொரு மாநிலமும், தங்கள் கருத்தை தெரிவிக்கும். தி.மு.க., தேவை இல்லாமல், இப்பிரச்னையை முன்னெடுப்பதாக கூறிக் கொள்கிறது.

மக்கள்தொகை அடிப்படையில், ஏற்கனவே லோக்சபா தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டபோது, லடாக், லட்சத்தீவு போன்றவற்றுக்கு, மக்கள்தொகையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை நடக்கும் என, தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது. அப்படி யாரும் கூறவில்லை.

தொகுதி மறுவரையறை என்பது, மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் மேற்கொள்ளப்படுவதில்லை. கடந்த லோக்சபா தேர்தலின்போது, மக்கள்தொகை அடிப்படையில், அவர்களுக்கான பங்கு கிடைக்க வேண்டும் எனக் கூறியவர் ராகுல்.

குழப்புகின்றனர்


இன்று, அவரது கட்சியினர், தி.மு.க., கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தி.மு.க., ஒரு பொய்யை கூறி விட்டு, அடுத்தடுத்து பொய் பிரசாரங்களை செய்கிறது.

'நாங்கள் நிறைய கொடுக்கிறோம்; எங்களுக்கு அதிகம் வேண்டும்' என்கின்றனர். அதேபோல் தமிழகத்தில் அவர்களால் செயல்படுத்த முடியுமா? கோவை, சென்னைக்கு செலவழிக்கும் அளவு, அரியலுாருக்கு செலவழிக்கின்றனரா?

மேலும், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அதை கணக்கில் கொள்ளாமல், மத்திய அரசு தங்களுக்கு பண மூட்டையாக கொடுக்க வேண்டும் என்கின்றனர்.

நிதி வேண்டும் என்றால், நிதிக்குழுவிடம் சென்று கேட்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் ஊழல் குறித்து நடவடிக்கை எடுத்தால், அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, மக்களை குழப்புகின்றனர்.

மறுத்து விட்டது


பி.எம்.ஸ்ரீ., திட்டத்தில் கையெழுத்திட, முதலில் தமிழக அரசு ஒப்புக் கொண்டது; பின்னர் மறுத்து விட்டது. இத்திட்டத்தில் தமிழகம் மட்டுமே கையெழுத்திடாமல் உள்ளது.

தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கலந்து கொண்ட, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன.

தி.மு.க.,வினர் யாரும் புதிய தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்துப் பார்க்கவில்லை. ஏனெனில், ஹிந்தி படித்தாக வேண்டும் என, எந்த இடத்திலும் அதில் சொல்லவில்லை. ஒரு வரி இருந்தால் கூட, நான் மன்னிப்பு கேட்கிறேன்.

தேசிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழி வழிக் கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், மாணவர்கள் மூன்றாவது மொழி கற்கின்றனர். அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறோம்.

மூன்றாவது மொழி என்றால், அனைத்து பள்ளிகளிலும் அனைத்து மொழிகளும் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

பெற்றோர் தங்கள் குழந்தைக்கு எந்த மொழி வேண்டுமோ, அந்த மொழி கற்றுக் கொடுக்கும் பள்ளியில் சேர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அரசு வாய்ப்பை வழங்க வேண்டும். எந்த மொழி என்பதை பெற்றோர் முடிவு செய்யட்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்