பிராமணர்களுக்கு எதிராக திரிக்கப்பட்ட கட்டுக்கதைகள்: எச்.ராஜா ஆவேசம்

24 பங்குனி 2025 திங்கள் 09:04 | பார்வைகள் : 289
பிராமணர் என்ற கட்டமைப்பை உடைக்காமல் ஹிந்துக்களை மதமாற்றம் செய்ய முடியாது என உணர்ந்த கிறிஸ்தவ மிஷனரிகள், பிராமணர்களுக்கு எதிராக கட்டுக் கதைகளை திரித்துக் கூறினர் என்று பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.
உலக பிராமணர் நலச் சங்கத்தின் 11ம் ஆண்டு விழா, சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. இதில், தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
முக்கிய பங்கு
வீடியோ கான்பரன்ஸ் வழியே விழாவை துவக்கி வைத்து, காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில், ''இன்று மக்கள், அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளால் திசை திருப்பப்பட்டு உள்ளனர். வரலாறு திரிக்கப்படுகிறது. தேசத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் நம்மிடம் உள்ளது. எனவே, உண்மையான வரலாற்றுப் பிரசாரத்தை, மக்களிடம் இளைஞர்கள் கொண்டு செல்வது அவசியம்,'' என்றார்.
பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, வீடியோ கான்பரன்ஸ் வழியே பேசுகையில், ''தமிழகத்தின் கலாசாரத்தை பேணிக் காப்பதில் பிராமணர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இன்றளவும் சனாதனம் இருக்க காரணமானவர்கள் அவர்கள்,'' என்றார்.
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா பேசியதாவது:
தமிழகத்தில் மட்டும் தான் 150 ஆண்டுகளாக பிராமணர் எதிர்ப்பு இருந்து வருகிறது. இது, வேறு எங்கும் கிடையாது. பிராமணர் என்ற கட்டமைப்பை உடைக்காமல், ஹிந்துக்களை மத மாற்றம் செய்ய முடியாது என்பதை கிறிஸ்துவ மிஷனரிகள் உணர்ந்தன. அதனால், பிராமணர்களுக்கு எதிராக பல கட்டுக்கதைகளை திரித்து கூறினர். கால்டுவெல்லின் இழிவான புத்தியில் இருந்து வந்தது தான், ஆரியம், திராவிடம் என்ற வார்த்தை.
இனவாதத்தை அம்பேத்கர் ஏற்கவில்லை. கால்டு வெல், திருநெல்வேலி பகுதியில் நாடார் மக்களை மத மாற்றம் செய்ய முயன்றபோது, அந்த மக்கள் மறுத்துள்ளனர். அதனால், 'நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் இல்லை; வந்தேறிகள்' என, 'திருநெல்வேலி சாணார்கள்' என்ற புத்தகத்தில் கால்டுவெல் எழுதி உள்ளார்.
அப்போது, 'நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் தான்' என, தில்லைவாழ் அந்தணர்கள், சிதம்பரம் தீட்சிதர் ஆகியோர் நீதிமன்றத்தில் வாதாடினர். இப்படி ஒற்றுமையோடு வாழ்ந்த சமூகத்தில் புதுசு புதுசாக கரடி விடுகின்றனர்.
விமர்சனம்
என்னை சனீஸ்வரன் என விமர்சித்த சேகர்பாபு உள்ளிட்ட தப்பு செய்யும் யாரையும் தண்டிக்காமல் விடமாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், திரைப்பட இயக்குநர் மோகன்.ஜி, டாக்டர் ராஜ்குமார், நெல்லை சடகோபன், சேவாலயா முரளிதரன், உடையாளூர் கல்யாணராமன், மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது; மேஜர் மதன்குமாருக்கு இளைஞர் விருது, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கார்த்திக் கோபிநாத்துக்கு சமூக சாதனை விருது; மாது பாலாஜிக்கு சுவை நாடக வல்லுநர் விருது வழங்கப்பட்டன.