புறமுதுகு காட்டி தி.மு.க., ஓடுவது ஏன்? த.வெ.க., தலைவர் விஜய் கண்டனம்

24 பங்குனி 2025 திங்கள் 10:07 | பார்வைகள் : 578
எல்லா மாநிலங்களுக்கும், முன்னோடியாக திகழ்கிறோம் என மார்தட்டும் தி.மு.க., அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் புறமுதுகு காட்டி ஓடுவது ஏன்' என, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
அரசு இயந்திரத்தின் அச்சாணியான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, நியாயமான தீர்வு காண வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதை தி.மு.க., அரசு செய்ய முன்வரவில்லை. கண் துடைப்புக்காக பேச்சு மட்டும் நடத்திவிட்டு கண்டும், காணாமல் கைவிட்டுவிட்டது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்காக, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை கெஞ்சி கூத்தாடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் எனக் கூறினர். தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும், 309வது வாக்குறுதியாக அதை வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்தினர். இப்போது கோரிக்கைகளை நிறைவேற்றாமல், லட்சக்கணக்கான குடும்பங்களை, தி.மு.க., அரசு ஏமாற்றி உள்ளது.
ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக அரசும் மீண்டும் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது.
எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறோம் என, மார்தட்டும் தி.மு.க., அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்? தி.மு.க., அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விடுமுறை நாளில் போராட்ட களத்தில் உள்ளனர்.
இது, மிகப்பெரிய கையறு நிலையாகும். தி.மு.க., அரசுக்கு இது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக, தமிழக வெற்றிக்கழகம் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.