இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் - 50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

24 பங்குனி 2025 திங்கள் 07:31 | பார்வைகள் : 714
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சுமூகமின்மை காரணமாக மீண்டும் இஸ்ரேல் போரைத் தொடங்கிய நிலையில் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளமை உலகை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடந்து வருகின்றது. ஹமாஸ்க்கு ஆதரவாக ஹெஸ்புல்லா, ஹவுதி அமைப்புகளும் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்ரேலை தாக்கி வந்தன.
இந்நிலையில் இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து நடத்திய தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், மக்கள் காசாவிலிருந்து வெளியேறினர். சமீபத்தில் அமெரிக்கா தலையீட்டின் பேரில் தற்காலிக போர் நிறுத்தம் ஜனவரியில் அமலுக்கு வந்தது.
தொடர்ந்து ஹமாஸ் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை விடுவித்தது.
அதனை தொடர்ந்து இஸ்ரேலும் பாலஸ்தீன கைதிகளை விடுவித்து வந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சுமூக நிலை ஏற்படாத நிலையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.
முதல்கட்ட பேச்சுவார்த்தையில் நிலவிய சுமூக நிலை காரணமாக பாலஸ்தீன மக்கள் பலர் மீண்டும் காசாவுக்கு செல்லத் தொடங்கியிருந்தனர். இந்த சமயத்தில் இஸ்ரேல் கண்மூடித்தனமாக காசாவை தாக்கத் தொடங்கியதால் ஏராளமான பெண்கள், குழந்தைகள் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், காசாவின் சாலைகளில் பிணங்கள் குவிந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றது.