12 வட்டாரங்களுடன் பரிஸ் மாவட்டம்!
18 பங்குனி 2017 சனி 13:30 | பார்வைகள் : 19003
இல்லையே... பரிசில் 20 வட்டாரங்கள் ஆச்சே... என யோசிக்கிறீர்களா..? 20 வட்டாரங்கள் தான். ஆனால் பரிஸ் மாவட்டம் முன்னர் 12 வட்டாரங்களை மாத்திரமே கொண்டு சிறிய மாவட்டமாக இருந்தது.
பரிஸ் வரைபடத்தை பார்த்தீர்கள் என்றால் 'நுளம்புத்திரி' போன்று நடுவில் இருந்து சுழன்றுகொண்டு செல்லும்... அதில் முதல் 12 வட்டாரங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் (மேலே புகைப்படத்தில்)... அந்த 12 வட்டாரங்களை கொண்ட பகுதி மட்டுமே பரிஸ் மாவட்டமாக இருந்தது... 11 ஒக்டோபர் 1795 ஆம் ஆண்டு இதுபோன்று 12 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டது.
அப்போதெல்லாம் பரிசில் மக்கள் தொகை மிக சொற்பமே! பரிசில் பல இடங்கள் சும்மாவே கிடந்தன. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை... 1850 ஆம் ஆண்டுகளில் பரிசில் இடம் போதவில்லை... தொடரூந்து நிலையம்... விமான நிலையம்... இன்னபிற அரச தனியார் கட்டிடங்கள் எல்லாம் படையெடுக்க... 'உடனடியாக' பரிசை விரிவு படுத்தவேண்டிய கட்டாயம் எழுந்தது.
ஜூலை 1, 1860 ஆம் ஆண்டு, அந்த 'நுளம்புத்திரி'யில் 8 வட்டாரங்களால் மேலும் ஒரு வட்டத்தை சுற்றி, மொத்தம் 20 வட்டாரங்கள் ஆகி, '20 வட்டாரங்கள் சேர்ந்ததே பரிஸ்' என அறிவித்தார்கள். 75001 இல் இருந்து 75020 வரை 'Postal code' பிரிக்கப்பட்டது.
20 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு முற்றாக 200 வருடங்கள் கூட ஆகவில்லை.. தற்போதோ 'மகிழுந்து தரிப்பிடம்' ஒன்றுக்கு அலையோ அலை என்று அலையவேண்டி உள்ளது. அவ்வளவு நெருக்கடி... பொறுத்தது போதும் என "இல்-து-பிரான்ஸ் மொத்தமே 'பரிஸ்' தான்.. என அறிவித்துவிட்டார்கள்..!
இனிமேல் இல் து பிரான்ஸ் என்று மாகாணமே கிடையாது. அதைத்தான் புதுப் பெயர் ஒன்று வைத்து பரிஸ் ஆக்கப் போகிறார்கள்..!
அதன் பெயர் 'குரோ(ன்) பறி' ( Grand Paris )