சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

24 பங்குனி 2025 திங்கள் 13:03 | பார்வைகள் : 1555
துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: இன்று (மார்ச் 24) காலை 9.30 மணி முதல், துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர்.
என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர்.
9.30 மணி முதல் இதுவரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.