ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படம் "கஜினி" இரண்டாம் பாகமா?

24 பங்குனி 2025 திங்கள் 14:42 | பார்வைகள் : 643
பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள "சிக்கந்தர்" மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள "மதராஸி" ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களையும் அவர் மாறி மாறி இயக்கிய நிலையில், "சிக்கந்தர்" திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அதேபோல் "மதராஸி" திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் குறித்த கேள்விக்கு, அவரே பதில் கூறியுள்ளார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, அசின் ஆகியோர் நடிப்பில் உருவான "கஜினி" திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும், இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடித்தார் என்பதும், அந்த படமும் வசூல் அளவில் சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் "கஜினி" இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த முருகதாஸ், "கஜினி 2’ குறித்து எனக்கு சில ஐடியாக்கள் தோன்றியுள்ளன. தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் இந்த படத்தை தயாரிக்க ஆர்வமாக உள்ளார். சரியான நேரத்தில் "கஜினி 2" படத்தை எடுப்பது குறித்து முடிவு செய்வோம். இந்த படம் உருவானால், தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் உருவாக்குவோம்" என்று கூறியுள்ளார்.
அப்படி என்றால், இந்த படத்தில் சூர்யா மற்றும் அமீர்கான் இருவரும் இணைந்து நடிப்பார்களா? தனித்தனியாக நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.