'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு...!

24 பங்குனி 2025 திங்கள் 14:46 | பார்வைகள் : 371
தளபதி விஜய் நடித்திருக்கும் "ஜனநாயகன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், புதிய போஸ்டரும் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் "ஜனநாயகன்" திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பை தொடங்கியது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், விஜய் அதன் பிறகு முழுவதுமாக அரசியலில் ஈடுபடுவார் என்றும் தமிழக முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இது விஜய்யின் கடைசி திரைப்படமாக ‘ஜனநாயகன்’ இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சற்றுமுன் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதேசமயம், வண்ணமயமான புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் வில்லனாக பாபி தியோல் நடிக்கவிருக்கும் நிலையில் மமிதா பாஜு, பிரியாமணி, கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.
மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, கலை இயக்குனராக செல்வகுமார், படத் தொகுப்பாளராக பிரதீப் ராகவ், உடை வடிவமைப்பாளராக பல்லவி, பப்ளிசிட்டி டிசைனராக கோபி பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.