Paristamil Navigation Paristamil advert login

WIFI கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்குகிறதா..?

WIFI கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்குகிறதா..?

24 பங்குனி 2025 திங்கள் 14:50 | பார்வைகள் : 569


தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அனைவரின் கையிலும் மொபைல் போன்கள் இருக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதேபோல், அனைத்து விதமான தகவல்களையும் அறிந்து கொள்ளும் விதமாக இணைய வசதிகளும் பெருகிவிட்டன. இத்தகைய வளர்ச்சி உலகத்தையே உள்ளங்கைக்குள் அடக்கியிருக்கிறது. மேலும், அதி வேக இணையத்தை அணுகும் விதமாக வயர்லெஸ் தொழில்நுட்பமான வைஃபை ஆப்ஷன்களும் அதிகரித்திருப்பது, மக்களின் இணைய அணுகலை எளிதாக்குகின்றன.
ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி இணையத்தை அணுக முடிகிறது. ஆனால், வைஃபை பயன்படுத்துவதால் புற்றுநோய் உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக சில அறிக்கைகள் பரவி வருகின்றன. அதன் உண்மைத்தன்மையைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

டேட்டாக்களை அனுப்பவும், பெறவும் வைஃபை மின்காந்த கதிர்வீச்சைப் பயன்படுத்துகிறது. இத்தகைய, மின்காந்த புலங்கள் (EMFகள்) கதிர்வீச்சினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய வசதியான சூழலை உருவாக்கித் தரும் வைஃபை-களால், கதிர்வீச்சு புற்றுநோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளதாக சில கவலை தரும் செய்திகள் வலம் வருகின்றன. இருப்பினும், இதுபற்றிய எந்தவிதமான ஆவணப்படுத்தப்பட்ட உடல்நல ஆபத்துகளும் உறுதிசெய்யப்படவில்லை. எனினும், வைஃபை மற்றும் புற்றுநோய் குறித்த தற்போதைய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்பதை இனி ஆராய்வோம்.

வைஃபை-கள் அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சை உருவாக்குகிறது, இது ஒரு வகையான ரேடியோ அதிர்வெண் கதிர்வீச்சாகும். இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சுகள் டிஎன்ஏவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, எனவே, இது புற்றுநோயுடன் இணைக்கப்படவில்லை.

2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சில சான்றுகளின்படி, வைஃபை உடலில் சாதாரண செல்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது புற்றுநோய்க்கும் வழிவகுக்கும் என்று பரிந்துரைத்தன. இருப்பினும், அடுத்தடுத்த ஆய்வுகள் முரண்பட்ட முடிவுகளையே தந்துள்ளன. மேலும் தற்போதைய ஒருமித்த கருத்து என்னவென்றால், வைஃபை புற்றுநோயை ஏற்படுத்தாது என்பதாகும்.

டிஎன்ஏவை சேதப்படுத்தாத கதிர்வீச்சை வைஃபை-கள் பயன்படுத்துவதால், அது புற்றுநோயை உண்டாக்காது என்பது சமீபத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

கொல்கத்தாவின் அனந்தபூரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் புற்றுநோயியல் ஆலோசகரும், மருத்துவருமான ஆஷிஷ் உபாத்யாயாவின் கூற்றுப்படி, “வைஃபை அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சைப் பயன்படுத்துகிறது, இது ரேடியோ அதிர்வெண் அதிர்வுகளைக் கொண்டுள்ளது. வைஃபை-யால் வெளியிடப்படும் மின்காந்த புலம் (EMF) பாதுகாப்பு வரம்புகளுக்குள் உள்ளது மற்றும் தொலைதொடர்பு வாரியத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபற்றிய விரிவான கண்காணிப்பு, வைஃபைக்கும், புற்றுநோய் அல்லது பிற உடல்நல பிரச்சனைகளுக்கும் இடையே எந்த தொடர்பையும் கண்டறியவில்லை” என்று கூறினார்.

உலக 2011 இல் சுகாதார அமைப்பு (WHO) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் வைஃபைக்கும், புற்றுநோய்க்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்று பரிந்துரைத்திருந்தது. இருப்பினும், பிற்கால ஆய்வுகள் இந்த கண்டுபிடிப்புகளுடன் முரண்பட்டுள்ளன. வைஃபை டிஎன்ஏவை சேதப்படுத்தாது, எனவே, புற்றுநோயுடன் இணைக்கப்படக்கூடாது என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிப்பது அவசியம். துல்லியமான தகவல்களைப் பரப்புவது தேவையற்ற பயத்தையும், கவலையையும் போக்க உதவும்.

பப்மெட் ஆய்வறிக்கையின்படி, எலிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் ஆக்ஸிஜனேற்ற நொதிகளின் செயல்பாட்டை வைஃபை குறைக்கிறது. இருப்பினும், வைஃபைக்கும், புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பை சோதித்த பெரும்பாலான ஆராய்ச்சிகளில் விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, அத்தகைய கண்டுபிடிப்புகள் சந்தேகத்திற்குரியவையே, மேலும், இந்த கேள்விக்கு உறுதியான பதில் நமக்கு கிடைக்கவில்லை. எனவே, வைஃபை அல்லது மின்காந்த புலங்கள் பொதுவாக புற்றுநோயை ஏற்படுத்துகின்றன என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்