தேர்தலுக்கு பிந்தைய வங்கி கையிருப்பு ரூ.10,107 கோடியுடன் பா.ஜ., முதலிடம்

25 பங்குனி 2025 செவ்வாய் 06:09 | பார்வைகள் : 902
பா.ஜ., உட்பட ஆறு கட்சிகளின் வங்கிக் கணக்குகளில், கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் இருந்த தொகையை விட, தேர்தல் முடிந்த பின் அதிக பணம் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்பு விபரங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்வர்.
அதே போல, தேர்தல் முடிந்த பின் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்பு விபரங்களையும் தாக்கல் செய்வர்.
கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தெலுங்கு தேசம் உட்பட ஆறு கட்சிகளின் வங்கி இருப்பு துவக்கத்தை விட, தேர்தல் முடிந்த பின் அதிகரித்து இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள விபரம்:
தேசிய கட்சிகளான பா.ஜ., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் மற்றும் தி.மு.க., தெலுங்கு தேசம் உள்ளிட்ட 17 மாநில கட்சிகளிடம் லோக்சபா தேர்தல் அறிவிப்பின் போது, மொத்தம், 11,326 கோடி ரூபாய் வங்கி இருப்பு இருந்தது.
தேர்தல் பிரசார காலத்தின்போது, இந்த கட்சிகள் மொத்தமாக, 7,416 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. அதில், 3,861 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
தேர்தல் முடிந்தபின் இவர்களின் வங்கி இருப்பு 14,848 கோடி ரூபாயாக இருந்தது.
இதில், பா.ஜ., தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூ., லோக் ஜனசக்தி - ராம்விலாஸ் பஸ்வான், சிக்கிம் ஜனநாயக முன்னணி, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய ஆறு கட்சிகள், தேர்தலுக்கு பின் அதிக நிதி கையிருப்பு வைத்திருந்தன.
அதில் பா.ஜ., முதலிடம் வகித்தது. தேர்தல் அறிவிப்பின் போது பா.ஜ., வங்கி இருப்பு 5,922 கோடி ரூபாயாக இருந்தது. தேர்தல் காலத்தின் போது, 6,268 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு, 1,738 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். தேர்தல் முடிந்த பின் வங்கி இருப்பு 10,107 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.