தொகுதி சீரமைப்பு பிரச்னையில் ஸ்டாலின் மன மாற்றம்

25 பங்குனி 2025 செவ்வாய் 07:11 | பார்வைகள் : 927
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. போராட்டம், சட்ட நடவடிக்கை என வேகம் காட்டிய முதல்வர், தற்போது தமிழக எம்.பி.,க்களை அழைத்து சென்று, பிரதமரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு செய்தால், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் தொகுதி களின் எண்ணிக்கை குறையும்.
எனவே, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய, முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
யோசனை
தனக்கு ஆதரவாக அண்டை மாநில முதல்வர்களையும், மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநில கட்சிகளின் தலைவர்களையும் அணி சேர்த்து, கூட்டு நடவடிக்கை குழு அமைத்துஉள்ளார்.
அந்தக் குழுவின் முதல் கூட்டம், கடந்த, 22ம் தேதி சென்னையில் நடந்தது. கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள், கர்நாடக துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், லோக்சபா தொகுதிகளின் மறுசீரமைப்பு தள்ளி வைக்கப்பட வேண்டும்; தற்போதைய எம்.பி.,க்கள் எண்ணிக்கையே மேலும், 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன், பார்லிமென்ட் கூட்டத்தொடரில், இக்கோரிக்கை முன்வைக்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கியமாக, இவ்விவகாரத்தில், அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அடுத்த நடவடிக்கைகளை வரையறுக்க, வல்லுனர் குழு அமைக்கப் போவதாகவும், முதல்வர் ஸ்டாலின், இக்கூட்டத்தில் முன்மொழிந்திருந்தார்.
அதன் வாயிலாக, மத்திய அரசுக்கு எதிராக அரசியல் ரீதியான போராட்டம், சட்ட ரீதியான வழக்குகள் என, அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு மாறாகவும், அவரது அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகவும், முதல்வரின் அறிவிப்பு அமைந்துள்ளது. அதற்கு காரணமாக, 'இண்டி' கூட்டணி தலைவர்களின் அறிவுறுத்தலும், யோசனையும் அமைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
சட்டசபையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், 2026ல் நடக்கவுள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்தின் ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படும்.
மக்கள் நல்வாழ்வு திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்திய, தமிழகம் போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படும்.
இதைச் சுட்டிக்காட்டி, முன்கூட்டியே எச்சரிக்கை மணியடித்து, நாட்டிலேயே முதன்முதலாக தமிழக சட்டசபையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த கட்டமாக, தமிழக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கடந்த 5ம் தேதி கூட்டினோம்.
இதன்பின், 22ம் தேதி, கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம், சென்னையில் நடந்தது. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றார்.
விரிவான ஆலோசனைக்கு பின், லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து, மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும். கடந்த 1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு, மேலும், 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.
மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. உரிய அரசியல் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும், இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
நடக்கும் லோக்சபா கூட்டத்தொடரில், இதுகுறித்து பிரதமரிடம், கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடிதம் அளித்து முறையிட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விசாரணை
ஜனநாயக உரிமை, அரசியல் பிரதிநிதித்துவ உரிமை போன்றவற்றை பாதுகாப்பதில், வரலாற்று சிறப்புமிக்க தீர்மானமாக இது நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முன்னெடுத்து செல்லும் தொகுதி மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வு, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதற்கான இந்த முன்னெடுப்புக்கு துணைநின்ற பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கை குழுவில் பங்கேற்ற அனைத்து கட்சிகளுக்கும், தமிழக மக்கள் சார்பில் இதயபூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
'தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற முழக்கத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று, நம் உரிமைகளையும், நம்மை போல பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.
நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெறுவதற்கு, தமிழகத்தில் இருந்து பார்லிமென்டில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.,க்களை எல்லாம் அழைத்து சென்று, பிரதமரை சந்திக்க இருக்கிறோம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.