பிரான்சின் முதல் வணிக பத்திரிகை!! - Les Échos சில தகவல்கள்!!
6 பங்குனி 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 18790
பிரான்சில் தினமும் எத்தனையோ பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டு உள்ளன. ஒவ்வொரு துறைசார்ந்தும் பல்வேறு பத்திரிகைகள் வெளியாகிக்கொண்டுள்ளன. இன்று பிரான்சில் வெளியான 'முதல்' வணிக ( financial) பத்திரிகையான Les Échos குறித்து சில தகவல்களை பார்க்கலாம்!!
1908 ஆம் ஆண்டு அது. சகோதர்களான Robert மற்றும் Émile Servan-Schreiber இருவரும் இணைந்து வணிக செய்திகள் வெளியிடுவதற்கென ஒரு பத்திரிகை ஆரம்பித்தார்கள். தனியே வணிகம் மட்டும் தான். பிரெஞ்சு மக்கள் வர்த்தகம், உள்நாட்டு வெளிநாட்டு வணிகம், ஏற்றுமதி இறக்குமதி போன்ற இத்தியாதி விடயங்களை அறியக்கூடிய வகையில் இருந்த அந்த பத்திரிகை மாதம் ஒருமுறை வெளிவந்தது. பத்திரிகையின் பெயர் Les Échos de l’Exportation.
பின்னர் இப்பத்திரிகைக்கு 'டிமாண்ட்' அதிகமாக, 1928 ஆம் ஆண்டு, இப்பத்திரிகை தனது பெயரை "Les Échos" என சுருக்கிக்கொண்டு... தினப்பத்திரிகையாக வெளிவரத்தொடங்கியது.
பின்னர் ஒரு கட்டத்தில் இப்பத்திரிகையை பிரித்தானிய வெளியீட்டாளர்களான Pearson PLC வாங்கிக்கொண்டார்கள். பின்னர் 1988 ஆம் ஆண்டு பிரெஞ்சு நிறுவனமான LVMH க்கு வந்தது. அதன் பின்னர் இன்றுவரை பத்திரிகை உரிமை LVMH இடமே உள்ளது. Les Échos இன் தலைமைச் செயலகம் பரிசில் உள்ளது. இப்பத்திரிகைக்கான இணையத்தளம் 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
2000 ஆம் ஆண்டு, பிரான்சில் அதிகம் விற்கப்பட்ட பத்திரிகைகளின் பட்டியலில் 728,000 பிரதிகள் விற்று 7 ஆம் இடத்தில் இருந்தது. இன்றுவரை சராசரியாக 120,000 பிரதிகள் விற்றுத்தள்ளுகிறது இப்பத்திரிகை. தற்போது இப்பத்திரிகை மாலி நாட்டிலும் விற்பனையாகிறது.
109 ஆண்டு கால வரலாற்றை தன்வசம் வைத்துக்கொண்டு, பிரெஞ்சு மக்களுக்கு வணிக வர்த்தக செய்திகளை அள்ளி வழங்குகிறது Les Échos!!