2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு

26 பங்குனி 2025 புதன் 14:55 | பார்வைகள் : 1561
2027ம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.,) ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்'' என சர்வதேச நிதி முனையம் (ஐ.எம்.எப்) கணித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.,) இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. 2025ல் 4.3 டிரில்லியன் டாலராக உயரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஐ.எம்.எப்., வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-25 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியா ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறும்.
இந்த வளர்ச்சிப் பாதையில் இந்தியா தொடர்ந்தால், 2027ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 4.9 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியை முந்திவிடும். சீனா, அமெரிக்கா, ஜெர்மனியை விட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது.
2032ம் ஆண்டுக்குள் இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி 10 டிரில்லியன் டாலராக மாறும். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 76%, அமெரிக்கா 66%, ஜெர்மனி 44%, பிரான்ஸ் 38% மற்றும் இங்கிலாந்து 28% அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.