பேஸ்புக்கை முடக்கியது பப்பு வா நியூ கினியா

26 பங்குனி 2025 புதன் 09:40 | பார்வைகள் : 2555
வெறுப்புப் பேச்சு, போலிச் செய்திகள் மற்றும் ஆபாசப் படங்களை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக பப்புவா நியூ கினியா பேஸ்புக்கை முடக்கியுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் திங்கட்கிழமை முதல் பேஸ்புக் திடீரென முடக்கப்பட்டதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டதோடு, இந்த செயற்பாட்டை மனித உரிமை மீறல் என தெரிவித்துள்ளனர்.
பப்புவா நியூ கினியா பொலிஸ் அமைச்சர் பீட்டர் சியாமலிலி ஜூனியர், அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சிக்கவில்லை. மாறாக "தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் செய்துள்ளது என இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக் மிகவும் பிரபலமான சமூக ஊடகமாகும். அங்கு பல சிறு வணிகங்கள் உட்பட 1.3 மில்லியன் மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.
நாட்டில் பத்திரிகை சுதந்திரம் குறைந்து வரும் நிலையில், பொது விவாதங்களை எளிதாக்குவதில் சமூக ஊடகங்களும் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இந்த நடவடிக்கை "அரசியல் எதேச்சதிகாரத்தின் எல்லைகள் மற்றும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாடு என பப்புவா நியூ கினியாவின் ஊடகக் குழுவின் தலைவர் நெவில் சோய் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலன் பேர்ட் பேஸ்புக்கில்,
"நாங்கள் இப்போது ஆபத்தான பகுதிக்குள் செல்கிறோம், இந்த கொடுங்கோன்மையைத் தடுக்க அனைவரும் சக்தியற்றவல்களாக உள்ளனர்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் இயற்றப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் திங்கட்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்திற்கு ஒன்லைன் தகவல்தொடர்புகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அதிகாரங்களை வழங்குகிறது.
"இந்த கொடூரமான சட்டம் எமது சுதந்திரங்களைப் பறிக்க வடிவமைக்கப்பட்டது. பேஸ்புக்கை தடைசெய்வது அதன் "முதல் படி" என தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் முடக்கப்பட்டிருந்த போதிலும் VPNகளைப் பயன்படுத்தி பலர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் தலைவரான ஜான் போரா, பேஸ்புக் ஊடாக தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டும் ஆயிரக்கணக்கான சில்லறை விற்பனையாளர்கள் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ளார்.
"எங்களிடம் இரண்டு இலட்சம் பேர் உள்ளனர், அவர்கள் கவலை அடைந்துள்ளார்கள். எனவே அவர்கள் வர்த்தகம் செய்ய அனுமதிக்க பேஸ்புக் வழமைக்கு திரும்பும் என நம்புகிறேன்," என தெரிவித்துள்ளார்.
பப்புவா நியூ கினியா அதிகாரிகள் நீண்ட காலமாக பேஸ்புக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டில், போலி கணக்குகளை வேரறுக்க அதிகாரிகள் பேஸ்புக்கிற்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டிருந்தனர்.
2023 ஆம் ஆண்டில், பப்புவா நியூ கினியா நாட்டில் "போலி செய்திகள், அவதூறான செய்தி அறிக்கையிடல் மற்றும் சமூக ஊடக தளங்கள் தொடர்பில் பாராளுமன்றம் விசாரணையை ஆரம்பித்தது.