பிரிட்டனின் குற்றச்சாட்டை மறுக்கும் மகிந்த!

26 பங்குனி 2025 புதன் 11:43 | பார்வைகள் : 2272
இலங்கை இராணுவ அதிகாரிகள் யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பிரிட்டன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை தான் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பணியாற்றிய, விடுதலைப் புலிகளின் கிழக்கு ஆயுதப் பிரிவின் தலைவராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரிட்டன் தடை விதித்துள்ள நிலையில், அது தொடர்பில் இன்று விசேட அறிவித்தலை வெளியிட்டு மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவ்விடத்திலும் நிரூபிக்கப்படாதது என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக யுத்தம் புரிவதற்கு அப்போதிருந்த நிறைவேற்று ஜனாதிபதியாகிய நானே தீர்மானித்திருந்தேன் என்றும், அதனை ஆயுதப்படை செயற்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலி பயங்கரவாதத்தால் 27,965 ஆயுதப் படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட சிவில் மக்களும் ஆயிரக் கணக்கில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தனது கடமையை நிறைவேற்றி இராணுவ அதிகாரிகளை இலக்கு வைத்து வெளிநாட்டு அரசுகள் மற்றும் அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நேரடியாக முன்னிற்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.